அதிர்ச்சி... காவலுக்கு நின்றவர் பணத்தை கொள்ளையடித்து சென்றதால் பரபரப்பு!

வேளச்சேரி காவல் நிலையம்
வேளச்சேரி காவல் நிலையம்

ஏடிஎம்மில் ஊழியர்கள் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்த போது வண்டியில் இருந்த 38 லட்ச ரூபாயை திருடி சென்ற காவலாளியை போலீஸார் உடனடியாக கைது செய்து பணத்தை மீட்டுள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் ’Hitachi Cash management’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பும் பணியினை மேற்கொண்டு வருகிறது. நேற்று காலை இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல லட்ச ரூபாயை பல்வேறு ஏடிஎம்மில் நிரப்ப, கொண்டு சென்றனர். முதலில் வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 10 இடங்களில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை லோடு செய்து விட்டு பின் கடைசியாக 5 பணப் பைகளுடன் ஊரப்பாக்கம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் லோடு செய்ய கொண்டு சென்றுள்ளனர்.

ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணம் கொள்ளை
ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணம் கொள்ளை

அங்கு ஊழியர்கள், பணத்தை ஏடிஎம் மிஷினில் லோடு செய்து கொண்டிருந்த போது காவலாளி ஞானசேகரன் வேனிலிருந்த ரூபாய் 37.71 லட்சம் அடங்கிய பணப்பை திருடிக் கொண்டு தலைமறைவானார். பின்னர் ஊழியர்கள் வந்து பார்த்த போது, பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே மேலாளர் அரவிந்தன், என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அரவிந்த் விரைந்து வந்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

காவலாளி கைது
காவலாளி கைது

புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்நிறுவனத்தில் பாதுகாப்பு காவலாளியாக பணியாற்றி வரும் கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஞானசேகரன்(45) பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. உடனே போலீஸார் அவரது வீட்டிற்குச் சென்று மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் திருவான்மியூரில் தனியார் விடுதியில் பதுங்கி இருந்த காவலாளி ஞானசேகரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 38 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in