`சிம்பு மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'

காவல்துறையை வலியுறுத்தும் பால் முகவர் நலச்சங்கம்
`சிம்பு மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'

மாற்றுத்திறனாளியின் உயிரிழப்புக்கு காரணமான கார் ஓட்டுநர் செல்வம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், நடிகர் சிம்பு மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் நடைபாதையில் வசித்து வரும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளியான முனுசாமி (70) கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள இளங்கோ- பிரார்த்தனா சாலை சந்திப்பில் சாலையில் தவழ்ந்தபடி வரும்போது அவ்வழியே வேக வேகமாக வரும் வாகனங்களை நிறுத்தி அவர் பாதுகாப்பாக சாலையை கடக்க உதவி செய்யாமல் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்தது மிகுந்த மனவலியை தந்தது.

இந்நிலையில் அவ்வழியே வரும் அடையாளம் தெரியாத டொயோட்டா இன்னோவா கார் ஒன்று சாலையை தவழ்ந்தபடி கடந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளி முனுசாமி மீது ஏற்றி இறக்கிவிட்டு நிற்காமல் வேகமாக செல்லும் சிசிடிவி காட்சி பதை பதைக்க செய்கிறது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அளித்த புகார் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது நடிகர் சிம்புவின் கார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. தற்போது கார் ஓட்டுநர் செல்வம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் நடிகர் சிம்பு மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

சாலையை கடக்க அந்த மாற்றுத்திறனாளி தவழ்ந்தபடி வருவதை அவ்வழியே சென்ற நபர்களில் எவர் ஒருவரேனும் அவர் பாதுகாப்பாக சாலையை கடக்க உதவி செய்திருந்தாலோ அல்லது நடிகர் சிம்புவின் கார் ஓட்டுநர் சற்று நிதானித்து நின்று அவர் சாலையை கடந்த பின்னர் சென்றிருந்தாலோ முனுசாமி இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்.

இது போன்ற மனிததன்மையற்ற, பொறுப்பற்ற மனிதர்களால் பல நேரங்களில் மனிதநேயம்கூட மரித்து தான்போகிறது. சட்டம் என்பது எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும் தனியொரு மனிதனாக இவ்வுலகில் மாறாத வரை மாற்றங்கள் என்பது சாத்தியமில்லை.

அதே நேரம் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நடிகர் சிம்பு போன்ற திரையுலக பிரபலத்தின் செயல்பாடே இப்படி இருக்கிறது என்றால் அவர்களை பின்பற்றும் ரசிகர்களின் நிலை எந்த அளவிற்கு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது? "பீப் பாடல்" எழுதி அதற்கு மிகப்பெரிய அளவில் பிரச்சினை எழுந்தபோதுகூட அதற்காக வருந்தாமல் அதுபோல இன்னும் 150 பாடல்கள் இருக்கிறது என கூறியவர், தனது "பட கட்அவுட்டுகளுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம்" செய்ய சொன்னவரிடம் இருந்து மனிதநேயத்தை எதிர்பார்ப்பது என்பது மிகப்பெரிய தவறுதான் என்பதை இந்நிகழ்வு உறுதி செய்கிறது. ஊருக்கு உபதேசம் செய்யும் திரையுலக நட்சத்திரங்கள் இனியேனும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் முன் மாதிரியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in