வாட்ஸ்அப்பில் வாக்குவாதம்; தேர்தல் பணிமனையில் அடிதடி... சென்னை பாஜக நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு!

அமைந்தகரை காவல் நிலையம்
அமைந்தகரை காவல் நிலையம்

மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் தொடர்பாக, பாஜக நிர்வாகிகள் இருவர் மீதும் அமைந்தகரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மட்டும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது மத்திய சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வினோஜ்.பி.செல்வம் வேட்பாளராக போட்டியிட்டார். அவரை ஆதரித்து அவரது கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏதுவாக தேர்தல் பணிமனை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்துவிட்ட பிறகும், வருகிற ஜூன் 4ம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் பாஜகவினர் அடிக்கடி இந்த பணிமனைக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.

மோதல்
மோதல்

நேற்று முன்தினம் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி மற்றும் அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமார் ஆகியோர் இந்த பணிமனைக்கு தங்களது ஆதரவாளர்களுடன் வந்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அருகில் இருந்த பாஜக தொண்டர்கள் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனிடையே இருவரும் ஒருவர் மீது ஒருவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாக கூறி புகார் மனு அளித்துள்ளனர்.

பாஜக
பாஜக

இது தொடர்பாக போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையின் போது, தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாடஸ் ஆப் குழு ஒன்றில் மூர்த்திக்கும் ராஜ்குமாருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டு, அது வாக்குவாதமாக மாறி உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் அலுவலகத்தில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரும் அளித்த புகாரின் பேரில், தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக நிர்வாகிகள் இருவர், தேர்தல் அலுவலகத்திலேயே ஒருவர் ஒருவர் தாக்கி கொண்டு, அந்த சம்பவம் வழக்குப் பதிவு செய்யும் அளவிற்கு பூதாகரமாகி இருப்பது அந்த கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in