
சென்னை கோயம்பேட்டில் தனியாருக்குச் சொந்தமான மால் ஒன்றில் நேற்று இரவு அனுமதியின்றி மது விருந்து நடந்தது. இதில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை கோயம்பேட்டில் வி.ஆர்.மால் இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு இளைஞர்களுக்காக பிரம்மாண்டமான ஏற்பாட்டில் மதுவிருந்து நடத்தப்பட்டது. இதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை. இந்நிலையில் இந்த மது விருந்தில் கலந்துகொண்ட மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் (23) என்ற வாலிபர் மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். உயிரிழந்த பிரவீன் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணி செய்துவந்தார்.
இதுதொடர்பாக விசாரித்த போலீஸார், அனுமதியின்றி மது விருந்துக்கு ஏற்பாடு செய்த சின்னத்துரை, விக்னேஷ், மார்க் பாரத் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.