பதவி உயர்வுக்கு லோன் வாங்கி லஞ்சம் கொடுத்த உதவியாளர்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பதவி உயர்வுக்கு லோன் வாங்கி லஞ்சம் கொடுத்த உதவியாளர்கள்

சென்னை போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் சாந்தி பரமசிவன், பிரேம்குமார் ஆகியோர், கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக வங்கியிலிருந்து கடன் பெற்று துணை ஆணையர் நடராஜனிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை துணை ஆணையர் நடராஜன் அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 35 லட்ச ரூபாயை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்துத் துறையில் வேலை பார்க்கும் 30 உதவியாளர்களிடம் பதவி உயர்வு வாங்கித் தருவதாகக் கூறி துணை ஆணையர் நடராஜன் வசூலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்டனர். அப்போது ஒரு சில உதவியாளர்களிடம் பதவி உயர்வு வழங்குவதற்காக பெறபட்ட பணத்தை தனது அறையில் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் முருகன் என்பவர் தங்கியிருக்கும் சேப்பாக்கம் தனியார் விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டதில் 1.79 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையை அடிப்படையாக வைத்து போக்குவரத்துத்துறை துணை ஆணையர் நடராஜன் மற்றும் உதவியாளர் முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள துணை ஆய்வுப் பிரிவு அதிகாரி சௌந்தர்ராஜன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், சோதனையின் போது 8 பண்டல்கள் என தனித்தனியாக பணம் பிரித்து வைக்கப்பட்டு ஒரு பையில் வைத்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டிலும் போக்குவரத்துத்துறையில் வேலைபார்க்கும் ஊழியர்கள் பெயர் இருந்ததாகவும், போக்குவரத்து துறையில் ஊழியர்களாக பணியாற்றி வரும் மாதேஸ்வரன் பரமசிவன், தசரதன் சாந்தலட்சுமி முருகன், பிரேம்குமார், சாந்தி மற்றும் பெயர் குறிப்பிடாமல் ஒரு கட்டுப்பணம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் சாந்தி பரமசிவன், பிரேம்குமார் ஆகியோர், கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா 5, 4, 3 லட்ச ரூபாய் என வங்கியிலிருந்து கடன் பெற்று துணை ஆணையர் நடராஜனிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முருகன் என்ற பெயரில் ஐந்து லட்ச ரூபாய் இருந்தது தொடர்பாக விசாரணை செய்தபோது, போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் அவர் உதவியாளராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். முருகனும், உதவியாளர் தங்கராஜிம் இணைந்து பலரிடம் பணத்தை வசூல் செய்து துணை ஆணையர் நடராஜனிடம் கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துணை ஆணையர் நடராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு தெரியாமல் யாரோ பணத்தை வசூல் செய்து தன் அறையில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில், தாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு நடராஜன் முறையாக பதில் அளிக்கவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in