சென்னையில் கார் ஓட்டுநர் கடத்தி எரித்துக் கொலை: போலீஸ்காரருக்கு வலைவீச்சு!

ரவி.
ரவி.

சென்னையில் காணாமல் போன கார் ஓட்டுநர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்குத் தொடர்பாக போலீஸ்காரர் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை கே.கே நகர் விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(26). இவர் எம்.எம்.டி.ஏ பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை பணிபுரிந்தார். அத்துடன் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஐஸ்வர்யா(23) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர். ஐஸ்வர்யா கே.கே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 31-ம் தேதி ஐஸ்வர்யா இரவு பணிக்கு சென்ற பின்னர் கணவர் ரவி தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மறுநாள் காலை ரவி வீட்டிற்கு வந்த மூன்று பேர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வருவதாகவும், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி ரவியை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பணி முடிந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யா வீட்டில் கணவர் இல்லாததால் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே கணவர் ரவியை கோயம்பேடு போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக ஐஸ்வர்யாவிற்குத் தகவல் கிடைத்தது.
அவர் அங்கு சென்று விசாரித்த போது பணியில் இருந்த காவலர்கள் நாங்கள் யாரையும் அழைத்து வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா தனது கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 4-ம் தேதி கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், தனது வீட்டின் அருகே செம்பியம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் செந்தில்குமார், தனது காதலி கவிதாவுடன் வசித்து வந்ததாகவும், செந்தில்குமாருடன் தனது கணவர் ரவியும் சேர்ந்து தினமும் மது அருந்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மகள் ஜெசிகா செந்தில்குமாரின் வீட்டருகே சிறு நீர் கழித்துள்ளார். இதனால் செந்தில்குமாரின் காதலியுடன் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அப்போது தனது கணவர் ரவியை செந்தில்குமார் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் காணாமல் போன அதே நாளில் செந்தில்குமார் குடும்பத்துடன் வீட்டைக் காலி செய்துவிட்டு சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது கணவரை செந்தில்குமார் கடத்தி சென்றுள்ளதாகவும், கணவரை மீட்டு தருமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காவலர் செந்தில்குமார் வீட்டில் விசேஷம் எனக்கூறி கடந்த 28-ம் தேதி முதல் பணிக்குச் செல்லவில்லை என்பது தெரிய வந்தது.

இதனால் சந்தேகமடைந்த கே.கே நகர் போலீஸார், தனிப்படை அமைத்து காணாமல் போன இருவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், ஈக்காட்டுதாங்கல், ராமாபுரம் என காண்பித்தது. உடனே போலீஸார் அங்கு சென்று சோதனை செய்த போது யாரும் சிக்கவில்லை.

இந்நிலையில் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கே.கே நகர் போலீஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் அந்த சடலத்தை மீட்டு காணாமல் போன ஒட்டுநர் ரவியின் உடலா என அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இந்த நிலையில் போலீஸார் ஐஸ்வரியாவை சம்பவ இடத்திற்கு இன்று அழைத்து சென்று எரிந்த உடலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது எரித்துக் கொல்லப்பட்டது ரவி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செந்தில்குமாரின் காதலி கவிதாவை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள காவலர் செந்தில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். கார் ஓட்டுநர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in