
எதிர்க்கட்சியினர் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக எழுந்துள்ள புகாரை மத்திய அரசு மறுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனமும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி, மஹுவா மொய்த்ரா, பிரியங்கா சதுர்வேதி, சசி தரூர், ராகுல் சத்தா, பவன் கேரா உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் ஆப்பிள் நிறுவன செல்போன்களுக்கு நேற்று காலை வந்த குறுஞ்செய்தியில், உங்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படலாம். தகவல்கள் திருடப்படலாம் என்றும் எச்சரிக்கை வந்தது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மத்திய அரசு மீது குற்றம்சாட்டினர்.
எனினும், இந்தச் செய்தியை ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘‘எச்சரிக்கை தொடர்பான சில தகவல்கள் தவறானதாக இருக்கலாம். பல நாடுகளில் உள்ள பயனாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையல்ல. எந்த அடிப்படையில் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டது என்று தெரிவிக்க இயலாது’’ என்று கூறப்பட்டுள்ளது.
ஒட்டுகேட்பு புகாருக்கு மத்திய அரசும் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘பொதுவான அடிப்படையில் 150 நாடுகளில் உள்ள மக்களுக்கு இந்த எச்சரிக்கையை அனுப்பி உள்ளனர். அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையல்ல என்று ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசை எதிர்க்க எந்தக் காரணமும் இல்லாதபோது ஒட்டுகேட்பு என்று பிரச்சினையை எழுப்புவார்கள். ஏற்கெனவே பெகாசஸ் நிறுவன ஒட்டுகேட்பு புகாரில் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அழிவு அரசியல் செய்கின்றனர்’’ என்று தெரிவித்தார்
இதையும் வாசிக்கலாமே...
பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!
கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!
சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!
அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!