சர்வதேச லைசென்ஸ் இருப்பதால் டிடிஎஃப் வாசன் மீண்டும் பைக் ஓட்டலாமா? - போக்குவரத்துத் துறை விளக்கம்

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்
Updated on
2 min read

சர்வதேச ஓட்டுநர் உரிமம் தன்னிடம் இருப்பதால் தொடர்ந்து பைக் ஓட்டுவேன் என்று டிடிஎஃப் வாசன் கூறிய நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முக்கிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் டிரெண்டிங்கில் இருந்த யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். கோவையைச் சேர்ந்த இவர் அதிவேகமாக பைக்கில் சென்று அதை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தார். இவரது யூடியூப் சேனல் இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம்.

ஆபத்தை விளைவிக்கும் விதமாக அதிவேகமாக பைக்கை ஓட்டி இளைஞர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக இருப்பதாக டிடிஎஃப் வாசன் மீது பலரும் குற்றஞ்சாட்டினர். இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் விமர்சித்தனர்.

இப்படி திடீரென டிரெண்டான அவர், "மஞ்சள் வீரன்" என்ற படத்திலும் கூட நடித்து வந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி டிடிஎஃப் வாசன் பைக் விபத்தில் சிக்கினார். அவர் தனது பைக்கில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே அவரது பைக் விபத்தில் சிக்கியது.

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் செல்லும் போது அவர் வீலிங் செய்ய முயன்ற போது விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பைக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அவர் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கூட இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. வீலிங் செல்ல முயன்ற போதே அவர் விபத்தில் சிக்கியதாகத் தெரிகிறது.

இருப்பினும், நீதிமன்றத்தில் தான் வீலிங் எல்லாம் செய்யவில்லை என்றும் எதிர்பாராத விதமாக முன்பக்க டையர் தூக்கியதே விபத்திற்குக் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கில் அவர் கடந்த செப்டம்பர் மாதம் முதலே சிறையில் தான் இருந்தார்.

அப்போது அதிவேகமாகவும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் வாகனத்தை ஓட்டியதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இந்தச் சூழலில் தான் டிடிஎஃப் வாசன் நேற்றைய தினம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சர்ச்சை: சுமார் 45 நாட்கள், சிறையில் இருந்த அவர் நேற்றைய தினம் தான் வெளியே வந்தார். வந்த முதல் நாளே அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையானது. லைசென்ஸ் ரத்து குறித்து மேல்முறையீடு செய்வீர்களா என்ற கேள்விக்கு, "பொதுவாக லைசென்ஸை ஒரு ஆண்டு, 6 மாதம் என கேன்சல் செய்வார்கள். ஆனால் எனக்கு 10 வருடம் என்றால் எப்படி? என்னால் யாருக்கும் ஆபத்தும் கிடையாது.

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

அதேநேரம் என்னிடம் சர்வதேச ஓட்டுநர் உரிமம் இருக்கிறது. இதனால் தொடர்ந்து பைக் ஓட்டுவேன்" என்று அவர் கூறியிருந்தார். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேச லைசென்ஸ் இருப்பதால் தொடர்ந்து பைக் ஓட்டுவேன் என்று அவர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.

இதற்கிடையே தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு முக்கிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் வாகனத்தை ஓட்ட முடியாது என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அதாவது சொந்த நாட்டில் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் போது சர்வதேச ஓட்டுநர் உரிமமும் ரத்தாகும் என்பதே விதி என்பதால், அவரால் இனி இந்தியாவில் எங்கும் வாகனத்தை ஓட்ட முடியாது என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆணையர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in