இரிடியம் மோசடியில் ரூ.3.5 கோடி இழந்த தொழிலதிபர் தற்கொலை!

போலீஸாரை கண்டித்து உறவினர்கள் மறியல்
இரிடியம் மோசடியில் ரூ.3.5 கோடி இழந்த தொழிலதிபர் தற்கொலை!

இரிடியம் மோசடி கும்பலிடம் ரூ.3.5 கோடியை இழந்த மானாமதுரை தொழிலதிபர் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். முன்பே புகார் கொடுத்தும் பணத்தை மீட்கத் தவறிய போலீஸாரைக் கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தபுரம் பைபாஸ் ரோட்டைச் சேர்ந்தவர் குட்டி (எ) ராஜீவ்காந்தி (39), தொழிலதிபர். இவரிடம் தேனி மாவட்டம் போடி வட்டம் பொட்டல்களம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கவுர்மோகன்தாஸ் (38) பல கோடி பெறுமானமுள்ள இரிடியம் கொண்ட பழமையான கோபுரக் கலசம் தருவதாக ஆசை காட்டியிருக்கிறார். அதை வாங்கி கை மாற்றினால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட பொய்யை நம்பி, மோகன்தாஸிடம் கடந்த 2015-ம் ஆண்டு 3.5 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார் ராஜீவ்காந்தி.

ஆனால், சொன்னபடி இரிடியம் அடங்கிய கோபுரக் கலசத்தை கவுர்மோகன்தாஸ் கொடுக்கவில்லை. மேலும், பணத்தையும் திரும்பத் தர மறுத்துவிட்டார். கோபுர கலசத்தில் இரிடியம் இருப்பதாகச் சொல்வதே மோசடியானது என்பதைத் தாமதமாகத் தெரிந்துகொண்ட ராஜீவ்காந்தி ஏமாற்றமடைந்தார். பணத்தைத் திரும்பத் தராத ஆத்திரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராஜீவ்காந்தி, தனது நண்பர்களுடன் சேர்ந்து கவுர்மோகன்தாஸை காரில் கடத்தி மானாமதுரைக்கே கொண்டு வந்து தனது வீட்டில் அடைத்துவைத்தார். பணத்தை தந்துவிட்டு போனால் போதும் என்று வைத்திருந்தார். ஆனால், மோகன்தாஸை போடி போலீஸார் மீட்டுச் சென்றனர்.

“பணம் தர வேண்டும் என்றால் சட்டப்படி புகார் கொடுக்கலாம். இப்படி நீங்களே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று போலீஸார் எச்சரித்ததால், ராஜீவ்காந்தி தான் இழந்த ரூ.3.5 கோடியை மீட்டு தர சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். ஓராண்டாகியும் பணம் திரும்பக் கிடைக்காத விரக்தியில் இருந்த ராஜீவ்காந்தி, அண்மையில் நடிகர் விக்னேஷ் உள்ளிட்டோர் இன்னொரு இரிடியம் மோசடி கும்பலிடம் ஏமாந்த செய்தியை பார்த்ததும், இனிமேல் பணம் வரவே வராது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி அவர் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரைக் காப்பாற்றிய உறவினர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, போலீஸார் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காததால்தான் ராஜீவ்காந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உறவினர்கள் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Related Stories

No stories found.