சென்னை, ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் முகமது சலீம்(29). இவர், நேற்று மாலை குடும்பத்தோடு பொருட்கள் வாங்குவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இரவு 9 மணியளவில் வீடு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகள் உள்பக்கம் தாழிட்டு இருந்துள்ளது.
மேலும், வீட்டின் உள்ளே மர்ம நபர்கள் பேச்சு சத்தம் கேட்டதை அறிந்த முகம்மது சலீம், உடனே ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் உள்பக்கம் தாழிட்டு இருந்த கதவை உடைத்துச் சென்று பார்த்த போது, பீரோ மற்றும் அதன் லாக்கர் உடைக்கப்பட்ட நிலையில் பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளது.
போலீஸ் சோதனையில் பீரோவில் இருந்த 13 பவுன் நகை, வெள்ளி கொலுசு, லேப்டாப், மொபைல் போன் சார்ஜர், ரூ. 2000 பணம் மேலும் வீட்டில் இருந்த மிக்ஸி, சில்வர் பாத்திரங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், கொள்ளையர்கள் வீட்டின் குளியலறையில் உள்ள ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியைக் கழட்டி வைத்து உள்ளே வந்ததுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதேவழியாகக் கொள்ளை அடித்த பொருட்களுடன் வெளியே சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதேபகுதியைச் சேர்ந்த 3 நபர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அதேபகுதியைச் சேர்ந்த காந்தா (எ) உசேன், நதீம் பாஷா, பில்லி ( எ) சமியுல்லா ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க நகை, லேப்டாப், மிக்ஸி மற்றும் பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மூவரும், வேறு ஏதேனும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.