செயலி வழி ‘ஏலம்’: பொதுவெளியில் களமாடும் பெண்களுக்கு எதிராக வன்மம்!

செயலி வழி ‘ஏலம்’: பொதுவெளியில் களமாடும் பெண்களுக்கு எதிராக வன்மம்!

பொதுவெளியில் குரல் கொடுக்கும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் எத்தனையோ கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அதிலும் அப்பெண் சிறுபான்மை தரப்பை சார்ந்தவரக இருப்பின் அந்த அடக்குமுறைகள் அசுர வேகமெடுக்கும். சுல்லி டீல்ஸ், புல்லி டீல்ஸ் என்ற பெயரிலான செயலிகளின் வழியாக பெண்களை இழிவுபடுத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இவை உள்ளிட்ட பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வருகின்றன.

சுல்லி, புல்லி என்பவை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவாக விளிக்கும் உள்ளூர் வழக்கிலான வார்த்தைகள். கடந்தாண்டின் மத்தியில் சுல்லி டீல்ஸ் என்ற பெயரிலான செயலி ஒன்று தலைகாட்டியது. அதில் இஸ்லாமிய பெண்கள் குறித்த விபரங்கள், புகைப்படங்களை வலையேற்றி அதன் கீழ் அவர்களை இஷ்டத்துக்கு இழிவுபடுத்தி வந்தார்கள். இதற்காக அந்த பெண்கள் விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டார்கள். விருப்பமுள்ளோர் போலியான ஏலத்துக்கு எடுத்து அந்த பெண்களை அவமானப்படுத்தி தங்கள் கீழ்மைகளை தீர்த்துக்கொள்வார்கள். பெண் மீதான இந்த இழிவுகளை வக்கிர கூட்டம் சேர்ந்து ரசிக்கும்.

இவையனைத்தும் பொதுவெளியில் பெண்களுக்காக குரல் கொடுக்கும் பெண்ணுரிமையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை குறிவைத்து நடத்தப்பட்டது. அப்படி இடம்பெற்றவர்களின் பட்டியல் நீளமானது. இவர்கள் அனைவரின் புகைப்படங்களையும் பகிர்ந்து தங்கள் வக்கிரத்தையும், வன்மத்தையும் கட்டவிழ்த்திருந்தனர்.

இந்த சுல்லி டீல்ஸ் குறித்து 6 மாதங்களுக்கு முன்னரே மும்பை, டெல்லி போன்ற மாநகரங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் சார்பிலானவர்கள் புகார் செய்தனர். ஆனால், இணையத்தில் இரைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான அக்குறும்பு செயலிகளில் ஒன்றாக, இந்த சுல்லி டீல்ஸையும் பாவித்த காவல்துறையினர் அலட்சியம் காட்டினர். அதன் விளைவாக சுல்லியை விட பன்மடங்கு விஷமத்துடன் இரண்டாவது செயலியான புல்லி டீல்ஸ் உதயமானது. இதனை பயன்படுத்துவோர் மத்தியில் புல்லி பாய் என்ற பெயரில் பிரபலமானது. வகைதொகையின்றி, இஸ்லாமிய பெண்கள் பலரின் புகைப்படங்கள் இதில் பதிவேற்றப்பட்டு போலி ஏலத்துக்கும் ஆளானார்கள். இந்த பெண்கள் அனைவரும் முன்மாதிரியானவர்கள். இவர்கள் குறித்த அவதூறுகளை கிளப்ப வேண்டும், பொதுவெளியில் செயல்பட விடாது முடக்க வேண்டும் என்பதே செயலியில் செயல்பட்டவர்களின் நோக்கமாக அம்பலப்பட்டிருக்கிறது.

இது குறித்த புகார்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது, தேசத்துக்கு வெளியேயும் கேள்விகளை எழுப்பியது. அதன் பின்னரே காவல்துறை சுதாரித்தது. எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் இந்த புல்லி பாய் செயலிக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்ததும், செயலி விவகாரத்தில் அரசியல் மேகம் சூழ்ந்துகொண்டது. செயலியை இயக்குவோர், அதில் தீவிரமாக களமாடுவோர் அனைவரும் தீவிரமான வலதுசாரிகளாக தென்பட்டதும் பிரச்சினை மேலும் கூர்மையடைந்தது. புத்தாண்டு தினத்தன்று வெடித்த இந்த விவகாரத்தில் திங்களன்று தொடங்கி இதுவரை இந்த செயலியின் பின்னணியில் இருக்கும் 3 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

முதல் நபராக கைதான பெங்களூர் பொறியியல் மாணவரான விஷால் குமார் என்பவர், தான் அரசியல் உள்நோக்கத்துடனும் வன்மத்துடனும் இஸ்லாமிய பெண்களை புல்லி பாய் செயலியில் சித்தரித்ததை ஒத்துக்கொண்டார்.தீவிர வலதுசாரியான அவர், செயலியின் பின்னணியில் இயங்கும் வேறு சிலரையும் காட்டிக்கொடுத்தார்.

அந்த வகையில் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த மயங்க் ராவல் என்ற 21 வயது கல்லூரி மாணவரும், 18 வயதாகும் ஸ்வேதா சிங் என்ற பெண்ணும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த ஸ்வேதா சிங், கடந்தாண்டு பள்ளிப்படிப்பை முடித்து, பொறியல் கல்லூரி நுழைவுத் தேர்வுக்காக தயாராகி வருபவர். தற்கொலைக்கு தாயையும், கரோனாவுக்கு தந்தையையும் பறிகொடுத்தவர். இவரது குடும்பத்தினர் அரசின் உதவித் தொகையை பெற்றும் பிழைத்துள்ளனர். ஸ்வேதா சிங் இந்த விஷம செயலியின் இந்திய தலைவர் என்ற தகவல் கிடைத்ததில் மும்பை சைபர் கிரைம் போலீஸார் அதிர்ந்துபோயுள்ளனர்.

கைது நடவடிக்கை இவர்களோடு முடியாது போலிருக்கிறது. பெண்களை தவறாக சித்தரித்த செயலிகளின் பின்னணியில் பல செல்வாக்கான குடும்பங்களின் வாரிசுகள் இயங்கி வந்திருப்பதும், அரசியல் செல்வாக்கு மிக்க சிலர் இந்த செயலிகளுக்கு எதிரான காவல்துறை விசாரணைகளை அவ்வப்போது ஆற்றுப்படுத்தி இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. வடக்கே 5 மாநில தேர்தல்களை கையில் வைத்துக்கொண்டு விஷப்பரிட்சையில் இறங்க அரசியல் மற்றும் அதிகார மட்டங்கள் தயாராக இல்லை. ஆனால் விசாரணையில் முன்னிற்பது மகாராஷ்டிர காவல்துறை என்பதால், விசாரணையின் போக்கில் தடுமாற்றமும் இல்லை.

லேட்டஸ்டாக உத்தரகண்டிலிருந்து நேபாளத்துக்கு விசாரணைகள் நீண்டிருக்கின்றன. இந்தியாவில் வன்ம செயலிகளை இயக்குவோரின் தலைமை நேபாளத்தில் வீற்றிருப்பதாகவும், க்யூ என்ற சங்கேத எழுத்தால் அழைக்கப்படும் நபர் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விஷம செயலிகள் அவற்றின் இயக்கத்துக்கு ஆதரவளித்த இணையதளங்கள் வாயிலாக தற்போது முடக்கப்பட்டுள்ளன.

6 மாதத்துக்கு முன்பே சுல்லி டீல்ஸ் குறித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற பெண்ணுரிமையாளர்களின் கேள்விக்கு டெல்லி போலீஸாரிடம் பதில் இல்லை. அப்போதே போலீஸார் களமிறங்கி இருப்பின் விஷமிகள் இந்தளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார்கள்.

சுல்லி, புல்லி செயலிகளின் பிரதிநிதிகள் கையாண்ட ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் விபரங்களை நீதிமன்றங்கள் வாயிலாக கோரும் நடவடிக்கையை மும்பை சைபர் க்ரைம் மேற்கொண்டுள்ளது. அவை வெளியில் வந்தால் பொதுவெளியில் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in