காவல் நிலையத்துக்குத் தீவைத்தவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிப்பு!

காவல் நிலையத்துக்குத் தீவைத்தவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிப்பு!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து அவரது உறவினர்கள் நேற்று காவல் நிலையத்துக்குத் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களின் வீடுகள் இன்று புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன.

அசாம் மாநிலத்தின் நகாவ் மாவட்டத்தில் உள்ள பதத்ரவா பகுதியைச் சேர்ந்த சஃபிகுல் இஸ்லாம் (39) எனும் மீன் வியாபாரி, நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியதாக போலீஸாரால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பதத்ரவா காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய அவர்கள் அங்கிருந்த காவலர்களைத் தாக்கினர். பின்னர், காவல் நிலையத்துக்குத் தீவைத்தனர். இதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக 21 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சமூகவலைதளப் பதிவில் இன்று அசாம் டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தா விளக்கமளித்திருந்தார்.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

அதில், ‘பொது இடத்தில் மது அருந்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் அழைத்துவரப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டு அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது மனைவி அவருக்கு உணவு / குடிநீர் வழங்கினார். அதன் பின்னர் சஃபிகுல் இஸ்லாமின் உடல்நலன் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு மருத்துவமனைகளுக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் மரணமடைந்தார்’ என்று அவர் கூறியிருந்தார்.

சஃபிகுல் இஸ்லாமின் மரணம் குறித்த வழக்கை அசாம் போலீஸார் தீவிரமாக எடுத்துக்கொண்டிருபதாகவும், இதுதொடர்பாகக் காவலர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், ‘இது உயிரிழந்தவரின் உறவினர்களின் ஆத்திரத்தால் ஏற்பட்ட சம்பவம் என நாங்கள் கருதவில்லை. அவர்கள் தீய குணம் கொண்டவர்கள்; குற்றப் பின்னணி கொண்டவர்கள். தங்கள் தொடர்பான ஆவணங்களை எரிப்பதற்காகவே காவல் நிலையத்துக்குத் தீ வைத்தார்கள். இது ஒரு சம்பவத்துக்கு எதிர்வினை என்று நினைக்காதீர்கள். அதற்கும் மேலானது இது’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு அகற்றம் எனும் பெயரில் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in