
நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு கலைக்கல்லூரி 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்த நிலையில், சில பேராசிரியர்கள் பெண் பேராசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுள்ள வரும் நிலையில் தற்போது துறை மாறுதல் பெற, பேராசிரியர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரியில் பணியாற்றும் தாவரவியல் பேராசிரியர் ரவி என்பவர், மாணவர்கள் வேறு துறைக்கு மாறி செல்ல 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் அவருடன் பேசிய செல்போன் உரையாடல்கள் மற்றும் ஜி பே செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த புகாரின் பேரில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வியியல் இயக்குனர் ஆகியோர் உத்தரவின் பேரில் கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் கலைச்செல்வி, உதகை அரசு கலைக் கல்லூரியில் நேரில் விசாரணை நடத்தியுள்ளார். சுமார் 4 மணி நேரம் நடந்த விசாரணையின் போது மாணவர்கள் தங்களிடம் உள்ள ஆதாரங்களை அவரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிக்கை இரண்டு நாட்களுக்குள் உயர் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே மாணவர்கள் துறை மாறுவது தொடர்பாக அவர்களுக்கு உதவிடும் வகையில் தனது சொந்த பணத்தில் கட்டணம் செலுத்தியதாகவும், அதனை திரும்ப கேட்டு அழைப்பு விடுத்து பணத்தை பெற்றதை தற்போது சிலர் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.