தடயங்களை அழிக்க மிளகாய் பொடி.. ஏடிஎம்மை உடைத்த வெல்டிங்: ரூ. 4.89 லட்சத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

தடயங்களை அழிக்க மிளகாய் பொடி..  ஏடிஎம்மை உடைத்த வெல்டிங்:  ரூ. 4.89 லட்சத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

நாமக்கல்லில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 4.89 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை பெருமாள் கோயில் மேட்டைச் சேர்ந்தவர் நடேசன். அவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் ஏடிஎம் மையம் திறந்திருப்பதுடன் உள்ளிருந்த இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, கியாஸ் வெல்டிங் வைத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்து ரூ. 4.89 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும், தடயங்களை மறைக்க ஏடிஎம் இயந்திரத்தைச் சுற்றி மிளகாய் பொடி தூவப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் ஏடிஎம் மையத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. சம்பவ இடத்திற்கு நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஏடிஏம் மையத்தில் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கியாஸ் வெல்டிங் வைத்து ஏடிஎம் இயந்திரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.