
கர்நாடக மாநிலத்தில் மாணவர்கள் தங்கிப் பயிலும் அரசு பள்ளி ஒன்றில் சிமென்ட் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்ததில் 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டத்தில் செயல்படும் மொரார்ஜி தேசாய் அரசு போர்டிங் பள்ளியில் இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்திருக்கிறது. இங்கே சுமார் 240 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். விடுதி வளாகத்தில் அமைந்துள்ள சிமென்ட் குடிநீர் தொட்டியின் சுவர் இடிந்ததில் விபத்து நேரிட்டுள்ளது.
இதில் தங்கள் தட்டுகளைக் கழுவச் சென்ற 3 மாணவர்கள் காயமடைந்தனர். இவர்களில் 6-ம் வகுப்பு பயிலும் கௌசிக் கவுடா என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். சுவர் இடிந்து தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்து சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், காயமடைந்த 2 மாணவர்களும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்துக்கு எதிர்க்கட்சி வரிசையில் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக எம்எல்ஏவான அஸ்வத் நாராயண், “பிஞ்சுக் குழந்தைகள் தங்கிப் பயிலும் பள்ளியின் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாததே இந்த துயரத்துக்கு காரணம். அப்பாவி சிறுவனின் உயிர் பலியாகி இருப்பதற்கு அரசு அதிகாரிகள் உட்பட பொறுப்பான பதவியில் இருக்கும் அனைவரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து களத்தில் இறங்கிய அரசு அதிகாரிகள், பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் இதர சுவர்களையும் இடிக்க உத்தரவிட்டனர். மேலும் இதர வளாகங்களில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி மற்றும் விடுதிகளின் கட்டிடங்கள் குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.