முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு, சன் டிவி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு, சன் டிவி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமான சன் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மாஸ்டர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் பட்டினம்பாக்கத்தில் உள்ள சன் தொலைக்காட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்க உள்ளதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். உடனே காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்கள் இது குறித்து ராயப்பேட்டை மற்றும் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று முதல்வர் வீடு, தொலைக்காட்சி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. பின்னர் போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது.

உடனே ராயப்பேட்டை போலீஸார் இது தொடர்பாக நத்தம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நத்தம் போலீஸார் அங்கு சென்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் 78 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பயன்படுத்துகிறது. இதனால் ஏற்படும் வெப்பம் தொலைக்காட்சி டிஷ் மூலமாக நேரடியாக சூரியனை பாதித்து வருகிறது. இதனால் 2025ம் ஆண்டுக்குள் சூரியனில் பெரும் அளவு மாற்றம் ஏற்படும். எனவே உடனடியாக தொலைக்காட்சி நிறுவனம் பயன்படுத்தி வரும் 78 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் இது தொடர்பாக பலமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தும் அவர்கள் கேட்கவில்லை. ஆகையால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த பிரபல தொலைக்காட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சொந்தமானது என நினைத்து அவரது வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in