எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவுடி ‘பாம்’ செல்வம் கைது!

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவுடி  ‘பாம்’ செல்வம் கைது!
‘பாம்’ செல்வம்

அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் எம்.கே.பாலன். பின்னர் அவர் திமுகவில் இணைந்தார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் பதவிவகித்தார். இந்நிலையில், 2001 டிசம்பரில் தனது வீட்டிலிருந்து நடைப் பயிற்சிக்காக வெளியே சென்ற பாலன் மாயமானார். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில், 2001 டிச.30-ல் அவர் கொலைசெய்யப்பட்டதாகவும், போலியான இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டு, 2002 ஜனவரி 1-ல் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 16 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்தனர். 2004-ல் சென்னை விரைவு நீதிமன்றம், அவர்களில் 15 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றம் அந்தத் தண்டனையை உறுதிசெய்தது. பின்னர், அவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 2016-ல் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில், இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். அதன்பிறகு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

இச்சூழலில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், 15 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்ததுடன் 3 வார காலத்துக்குள் குற்றவாளிகள் அனைவரும் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுவரை 9 பேர் சரணடைந்த நிலையில், 10-வது நபராக ரவுடி ‘பாம்’ செல்வத்தை, இன்று (டிச.20) பிடிவாரன்ட் மூலம் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிசிஐடி போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

குன்றத்தூரில் ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பாம் செல்வம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, எம்.கே.பாலன் கொலை வழக்கில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எதிரிகளை நோட்டமிட்டு, குறிவைத்து நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்வதில் இவர் கைதேர்ந்தவர் எனக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில், மீதமுள்ள 5 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in