ரயில் வரும் சில நிமிடங்களுக்கு முன் தண்டவாளத்தில் வெடித்த குண்டு: புதுச்சேரியில் அதிர்ச்சி

ரயில் வரும் சில நிமிடங்களுக்கு முன் தண்டவாளத்தில் வெடித்த குண்டு: புதுச்சேரியில் அதிர்ச்சி

சென்னை - புதுச்சேரி ரயில் வருவதற்கு சற்று முன் தண்டவாளத்தில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளுக்குள் ஏற்படும் மோதலின் போது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த முறையில் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதனைக் கேட்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த உருளையன்பேட்டை பேட்டை காவல்துறை ஆய்வாளர் பாபுஜி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அங்கு ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறிய துகள்கள் கிடந்தன. மேலும் மற்றொரு நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வெடிகுண்டை பத்திரமாக மீட்டனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகள் தண்டவாளத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீஸார் தேடினர்.

சென்னை - புதுச்சேரி ரயில் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு தான் காராமணிக்குப்பம் தண்டவாளத்தில் குண்டு வெடித்துள்ளது. வெடிக்காத மற்றொரு குண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த ரயிலைக் குறி வைத்து அங்கு தண்டவாளத்தில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டதா அல்லது தண்டவாளத்தை தகர்க்கும் நோக்கத்தில் வைக்கப்பட்டதா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரிஷி, பெரியார் நகர் கவுதம், அரவிந்த், கவியரசன் ஆகிய 4 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in