வேகமெடுக்கும் மகாதேவ் சூதாட்ட வழக்கு... தமன்னா முதல் ஷ்ரத்தா வரை மேலும் பல சினிமா ஸ்டார்களுக்கு சிக்கல்

தமன்னா பாட்டியா - ஷ்ரத்தா கபூர்
தமன்னா பாட்டியா - ஷ்ரத்தா கபூர்

மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி தொடர்பான வழக்கு வேகமெடுத்துள்ள நிலையில் பாலிவுட் நடிகர் சாஹில் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஷ்ரத்தா கபூர், ரன்பீர் கபூர், ஹூமா குரேஷி, தமன்னா பாட்டியா உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் நடிகர் சாஹில் கான் சத்தீஸ்கரில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை உயர் நீதிமன்றம் சாஹில் கானின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து, மும்பை சைபர் போலீஸின் சிறப்பு புலனாய்வுக் குழுவால் அவர் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டார்.

சஹில் கான்
சஹில் கான்

சுமார் 40 மணி நேரத்திற்கும் மேலான தேடலை அடுத்து ஜக்தல்பூரில் பதுங்கியிருந்த சாஹில் கான் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். சாஹில் கான் 'தி லயன் புக் ஆப்' என்ற பந்தய செயலி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இது மகாதேவ் பந்தய செயலி நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும்.

சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் ஆகிய இருவரும் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர். இந்தச் செயலி மூலம் தினமும் ரூ.200 கோடி வரை லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர்.

பூபேஷ் பாகெல் - அமலாக்கத்துறை
பூபேஷ் பாகெல் - அமலாக்கத்துறை

சத்தீஸ்கரின் காங்கிரஸ் முதல்வாராக இருந்த பூபேஷ் பாகெலுக்கு இவர்கள் ரூ.508 கோடி வழங்கியதாகவும், இந்த தொகையைக் கொண்டே காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக 2-வதாக தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் பூபேஷ் பாகெலின் பெயரை அமலாக்கத் துறை சேர்த்துள்ளது.

தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் பூபேஷ் பாகெல், மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறார். அவர் மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை, டெல்லியின் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இணையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் சாஹில் கான் கைதைத் தொடர்ந்து மேலும் பல பாலிவுட் நட்சத்திரங்கள் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் சிக்க உள்ளனர். இதற்கான சம்மன் விரைவில் அவர்களுக்கு அனுப்பப்பட இருக்கிறது. இவர்களில் பலரை ஏற்கனவே இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கபில் சர்மா, ஹினா கான், ஹுமா குரேஷி
கபில் சர்மா, ஹினா கான், ஹுமா குரேஷி

பாலிவுட் உச்ச நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் மகாதேவ் உள்ளிட்ட சூதாட்ட செயலிகளை இந்தியாவில் விளம்பரம் செய்தனர். அதற்கான தொகையை, ஹவாலா பரிமாற்றத்தின் மூலமாக பெற்றுள்ளனர். அதே போன்று மகாதேவ் உரிமையாளர்கள் தொடர்பான திருமண விழா ஒன்று துபாயில் நடந்தபோது, தனி விமானம் மூலமாக கபில் சர்மா, ஹுமா குரேஷி, ஹினா கான் உட்பட 17 பாலிவுட் நட்சத்திரங்கள் ஆகிய நட்சத்திரங்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களுக்கான பணமும் ஹவாலா பரிவர்த்தனை மூலமாகவே கொடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. ’ஃபேர்பிளே ஆப்’ என்பது மகாதேவ் பந்தய செயலியின் துணை செயலியாகும். இதனை விளம்பரப்படுத்தியதில் தமன்னா பாட்டியா சிக்கியுள்ளார். தங்களது விசாரணை வளையத்தில் இருக்கும் இவர்களுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளது. மக்களவைத் தேர்தல் மத்தியில் இந்த பாலிவுட் நட்சத்திரங்கள் மீதான அமலாக்கத்துறை விசாரணையால், மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பூபேஷ் பாகெல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், பிரச்சார களத்தில் பெரும் சங்கடத்தை எதிர்கொள்ளவிருக்கின்றனர். அமலாக்கத்துறையின் நோக்கமும் அதுதான் என்ற அரசியல் குற்றச்சாட்டும் இதன் பின்னே எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in