
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குளிக்கச் சென்று கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களின் உடல்கள் கரை ஒதுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பழைய வார்ப்பு பகுதியில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தருண் (12), சாமுவேல் (13) ஆகிய சிறுவர்கள் கடந்த 13-ம் தேதி அன்று கடலில் குளிக்கச் சென்றனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதைப்பார்த்த அங்கிருந்த புதுச்சேரி தலைமை நீதிபதியின் தனிச்செயலாளர் புஷ்பராஜ் கடலுக்குள் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயன்றார். ஆனாலும் பயனில்லை.
பலரும் கடலுக்குள் தேடிப்பார்த்து சிறுவர்களை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ராயபுரம் தீயணைப்புத் துறையினர் சிறுவர்களின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சிறுவன் தருணின் உடல் முதலில் கரை ஒதுங்கியது.
அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் சாமுவேல் உடலும் கரை ஒதுங்கியது. இதன்பின் சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.