`சமரசம் பேசியும் ஒத்துவராததால் தீர்த்துக்கட்டினோம்'- பாஜக பிரமுகர் கொலையில் கைதான ரவுடி அதிர்ச்சி வாக்குமூலம்

`சமரசம் பேசியும்  ஒத்துவராததால் தீர்த்துக்கட்டினோம்'- பாஜக பிரமுகர் கொலையில் கைதான ரவுடி அதிர்ச்சி வாக்குமூலம்

"பாஜக நிர்வாகியை கொலை செய்த பின்னர் ஆயுதங்களை ஆற்றில் வீசி விட்டு சாலையோரம் படுத்து உறங்கினோம்" என்று கைதான ரவுடி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 2-ம் தேதி பாஜக பிரமுகர் பாலச்சந்தர் படுகொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், எடப்பாடியில் தலைமறைவாக இருந்த சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ரவுடி பிரதீப், சஞ்சய், கலை மற்றும் ஜோதி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ரவுடி பிரதீப் அளித்த வாக்குமூலத்தில், "பாஜக பிரமுகர் பாலச்சந்தர் தொடர்ந்து தனது தந்தை தர்கா மோகனுக்கும், தங்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தார். யாரோ மாமூல் கேட்டதற்கு தங்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து சிறைக்கு அனுப்பினார். சிறையிலிருந்து கடந்த வாரம் தான் வெளியே வந்தேன். ஆனால் மறுபடியும் தன் மீது பாலச்சந்தர் பொய் புகார் அளித்து மிரட்டல் விடுத்தார். இதனால் பாலச்சந்தரிடம் சமரசம் பேசியும் ஒத்துவராததால், தீர்த்துக்கட்ட முடிவு எடுத்தோம். சம்பவம் நடந்த நாளன்று பாதுகாப்பு காவலர் பாலமுருகன் டீக்குடிக்க சென்ற போது இருசக்கர வாகனத்தில் சென்று பாலச்சந்தரை கொன்றோம்.

பின்னர் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புத்தூர் அருகேயுள்ள ஆற்றில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை வீசி விட்டு, உறவினர் ஒருவர் வீட்டில் துணி மாற்றிக்கொண்டு அன்றிரவு கடலூர் பகுதியில் சாலையோரம் படுத்து உறங்கி விட்டு, பேருந்து மூலமாக சேலம் எடப்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று பதுங்கியிருந்தோம். நீதிமன்றத்தில் சரணடைய வேண்டி செல்போனை பயன்படுத்திய போது காவல் துறையினர் அதை வைத்து எங்களை பிடித்துவிட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஆற்றில் வீசப்பட்ட ஆயுதங்களை காவல் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் பிரதீப் தந்தை ரவுடி தர்கா மோகனுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in