போலீஸ் பாதுகாப்புடன் இருந்த பாஜக பிரமுகர் படுகொலை: நடுரோட்டில் சென்னையில் நடந்த பயங்கரம்

போலீஸ் பாதுகாப்புடன் இருந்த பாஜக பிரமுகர் படுகொலை: நடுரோட்டில் சென்னையில் நடந்த பயங்கரம்

சென்னை கீழ்ப்பாக்கம் நியூ மண்டபம் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர் பாஜகவில் எஸ்சி-எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். சரித்திரபதிவேடு குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றிருந்த பாலசந்தரனின் பெயர் சில மாதங்களுக்கு முன்பு அப்பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. மேலும் பாலசந்தருக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்து வந்ததல் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு தனது பாதுகாது காவலர் பாலமுருகனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்ற பாலசந்தர் அங்கு நண்பர் சிலருடன் பேசி கொண்டிருந்தார். பாலசந்தர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது பாதுகாவலர் பாலமுருகன் அருகிலிருந்த கடைக்கு டீ அருந்த சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென பாலசந்திரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதனை பார்த்து ஓடிவந்த பாலமுருகன் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த சிந்தாரிப்பேட்டை போலீஸார் பாலசந்தரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பாலசந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸார் பாலசந்தர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் பாலசந்தர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து குறிப்பிட்ட மதம் குறித்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலசந்தருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் வந்த காரணத்தினால் பாலசந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலும் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாலசந்தரின் உறவினர்கள் துணிக்கடை நடத்தி வருகின்றனர். அந்த கடையில் மாமூல் கேட்டு ரவுடி பிரதீப் என்பவர் தொந்தரவு கொடுத்து வந்ததால் பாலசந்தர் இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்தார். பாலசந்தர் புகாரில் போலீஸார் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் பிரதீப்பின் தந்தையும் ரவுடியுமான மோகன் என்கிற தர்கா மோகனுக்கும், பாலசந்தருக்கும் இடையே பகை இருந்து வந்தததாக கூறப்படுகிறது.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த பிரதீப், மீண்டும் பாலசந்தர் உறவினர்களின் துணிக்கடைக்கு சென்று அங்குள்ள நபர்களை மிரட்டியதால், மீண்டும் பிரதீப் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த பிரதீப், தனது தந்தை மோகன் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலசந்தரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று மோகன், அவரது மகன் பிரதீப் உட்பட 6 பேர் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு பி.எஸ்.ஓ இல்லாத நேரத்தில் பாலசந்தரை கொலை செய்து விட்டு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 4 தனிப்படைகள் அமைத்து பிரதீப், மோகன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஏற்கெனவே பாலசந்தரை கொலை செய்ய திட்டம் போடுவதாக உளவுத்துறையினர் காவல் துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் போலீஸார் கோட்டை விட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் பாதுகாப்புடன் வந்த பாஜக நிர்வாகியை நடுரோட்டில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் வைத்து வெட்டி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in