
தமிழக அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கில் தங்களது கருத்தையும் கேட்க வேண்டுமென தமிழக பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு, எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் போர்ட்ஃ போலியோ வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, எம்எல்ஏக்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் முறையாக விசாரிக்கப்படவில்லை எனக்கூறி,தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து வந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். அதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் விசாரணைக்கு ஆனந்த் வெங்கடேஷ் எடுத்தார் .
இந்த வழக்குகளின் விசாரணையின்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "சொத்துக்குவிப்பு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. கீழமை நீதிமன்ற செயல்களைப் பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை எல்லோரும் வில்லனாக பார்க்கின்றனர்." என கருத்து தெரிவித்திருந்தார்.
அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இந்த வழக்குகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் விசாரணைக்கு மீண்டும் வரவிருக்கின்றன. இதற்கிடையே, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதேபோல், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்..ஆர் ராமச்சந்திரனும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். விரைவில் அந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், அமைச்சர்கள் மீதான் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக தங்களது கருத்தையும் கேட்க வேண்டுமென தமிழக பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து