சக்திவேல்
சக்திவேல்

பாஜக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை...மதுரை சுங்கச்சாவடி அருகே பயங்கரம்!

Published on

மதுரை வண்டியூரில் பாஜக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் பாஜக ஓபிசி பிரிவு மாவட்டச் செயலாளராக இருந்தார். இவர் மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே டூவீலரில் இன்று சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை டூவீலரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் வழிமறித்துள்ளது. இதனால் டூவீலரைப் போட்டு விட்டு சக்திவேல் தப்பியோட முயன்றார். ஆனால், அந்தக்கும்பல், சக்திவேலை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. இதன் பின் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

இந்த கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்த அண்ணாநகர் போலீஸார், விரைந்து சென்று சக்திவேல் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடரும் படுகொலைகள்

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் வெட்டிக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மேற்கு தாம்பரம் அருகே பாஜக எஸ்.சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மதுரை பாஜக நிர்வாகி சக்திவேல் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in