ஆட்டோவில் வந்து டூவீலர் திருட்டு: முன்னாள் அமைச்சர் வீடு அருகே துணிகரம்

பைக் திருடப்படும் சிசிடிவி காட்சி
பைக் திருடப்படும் சிசிடிவி காட்சி

முன்னாள் அமைச்சர் வீட்டின் அருகே திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விரைவாக கண்டுபிடித்து, திருடர்களை கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு குவிகிறது.

மதுரை காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் அண்ணாநகர் அருகே உள்ள செண்பகத் தோட்டம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை தனது இரு சக்கர வாகனத்தை அவரது நிறுவனத்தின் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இரவு திரும்பி வந்து பார்த்தபோது, தன்னுடைய இரு சக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது.

உடனடியாக, அண்ணாநகர் காவல் நிலையத்தில் கோபிநாத் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை துவங்கினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோவில் வந்த மூன்று பேர் கோபிநாத்தின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

கைதான மூன்று பேர்
கைதான மூன்று பேர்

அதனைத் தொடர்ந்து ஆட்டோ எண்ணை கொண்டு செல்லூரைச் சேர்ந்த சுரேஷ், நவநீதன், நாகராஜன் ஆகிய 3 பேரையும் இன்று மாலை கைது செய்து ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இத்திருட்டுச் சம்பவ நடைபெற்ற இடத்திற்கு அருகே முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரின் வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, துரிதமாக செயல்பட்டு திருடர்களைப் பிடித்த காவல்துறையினரை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் பாராட்டினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in