வீட்டு வாசலில் ரத்தக்கறை... தோண்டிப் பார்த்தால் வாலிபர் சடலம்: பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

வீட்டு வாசலில் ரத்தக்கறை... தோண்டிப் பார்த்தால் வாலிபர் சடலம்: பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

உளுந்தூர் பேட்டை அருகே ஒரு வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் (50). இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு டைல்ஸ் வேலை செய்ய பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து அவர் அழைத்து வந்தார். அவர்கள் மூவரும் வீடடின் மாடியில் தங்கி வேலை செய்து வந்தனர். இதில் ஒருவர் மே 4-ம் தேதி சொந்த ஊருக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள் இருவரும் தலைமறைவாயினர்.

இந்த நிலையில் ரமேஷ் கட்டி வரும் புதிய வீட்டின் முன்பக்க காம்பவுண்டு சுவர் அருகே மண்ணில் ரத்தம் வெளியேறி உறைந்து கிடப்பதாக உளுந்தூர்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீஸார், ரத்தம் உறைந்து கிடந்த இடத்தை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் தோண்டிப் பார்த்தனர்.

அப்போது மாயமான இரண்டு வடமாநில இளைஞர்களில் ஒருவரான பவுன் குமார் (22) கழுத்தை அறுத்து கொலை செய்து புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்டது எப்படி? அவரைக் கொலை செய்து யார்? காணாமல் போன மற்றொரு வடமாநில இளைஞர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் அப்பகுதியில் பணிபுரிந்த மூன்று பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in