பகீர்... வீடியோ! விபத்தில் பலியானவர் சடலத்தை கால்வாயில் தூக்கியெறியும் போலீஸார்!

சடலத்தை கால்வாயில் வீசும் போலீஸார்
சடலத்தை கால்வாயில் வீசும் போலீஸார்

சாலை விபத்தில் பலியானவர் உடலை கால்வாயில் தூக்கியெறியும் பீகார் போலீஸார் தொடர்பான பகீர் வீடியோ, இணையத்தில் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சாலை விபத்தில் பலியாகி சிதைந்தவரின் உடலை, மேம்பால சாலையிலிருந்து அதன் கீழே செல்லும் கால்வாயில் போலீஸார் தூக்கியெறியும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

’விபத்தில் இறந்தவரின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; முன்னதாக முறைப்படி போஸ்ட்மார்டம் செய்யப்பட வேண்டும்’ இவற்றில் எதையுமே பின்பற்றாத போலீஸார், சடலத்தை கால்வாயில் தூக்கியெறிந்த சம்பவம் பொதுவெளியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதிலும், இறந்தவர் எவரானாலும் அவரது கண்ணியத்தை காக்கும் வகையில் சடலத்துக்கு ஈமக்கிரியைகள் மற்றும் அடக்கம் செய்ய வழியின்றி, அலட்சியமாக போலீஸார் நடந்துகொண்ட விதம் பெரும் கண்டனத்தை பெற்றது.

இது தொடர்பாக விளக்கமளித்த பீகார் போலீஸ் அதிகாரிகள், ’கால்வாயில் தூக்கியெறிந்தது முழு சடலமல்ல; விபத்து காரணமாக உருக்குலைந்த சடலத்தின் ஒரு பகுதி மட்டுமே..’ என்று சமாளித்துப் பார்த்தார்கள். ஆனால் பொதுவெளியில் கண்டனம் அதிகரிக்கவே, கால்வாயில் வீசப்பட்ட சடலம் மீட்கப்பட்டு, இறந்தவரின் அடையாளத்தை காணும் பணி தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் பின்னர் அறிவித்தனர்.

மேலும் தங்கள் கடமையில் அலட்சியமாக செயல்பட்டதாக, காவல்துறை ஓட்டுநர் ஒருவரை சஸ்பெண்ட் செய்ததோடு, ஊர்க்காவல் படையினர் இருவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அலட்சியத்துக்கு காரணமான உள்ளூர் போலீஸ் அதிகாரி உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in