முன்னாள் மனைவி, மகளைச் சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை: பாட்னாவில் பயங்கரச் சம்பவம்

முன்னாள் மனைவி, மகளைச் சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை: பாட்னாவில் பயங்கரச் சம்பவம்

பிஹார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்தவர் ராஜீவ் குமார். அவருக்கும் அவரது இரண்டாவது மனைவி சசிபிரபாவுக்கும் இடையில் மனஸ்தாபம் இருந்துவந்தது. சசிபிரபாவின் அக்காவைத் திருமணம் செய்திருந்த ராஜீவ் குமார் அவர் மரணமடைந்ததால் சசிபிரபாவைத் திருமணம் செய்திருந்தார். எனினும், ராஜீவ் குமாருடன் வாழப் பிடிக்காமல் அவரை சசிபிரபா விவாகரத்து செய்திருந்தார். பின்னர், விமானப் படை அதிகாரி ஒருவரை மறுமணம் செய்துகொண்டார். ராஜீவ் குமாரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகளும், தந்தையுடன் வாழ விரும்பாமல் தனது சித்தியின் வீட்டில் வசித்துவந்தார்.

எனினும், மீண்டும் தன்னுடன் வசிக்க வருமாறு சசிபிரபாவையும், மகளையும் ராஜீவ் குமார் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. இந்நிலையில், இன்று பாட்னாவின் பேகுசராய் பகுதியில் நடந்த திருமணத்துக்குச் சென்றிருந்த சசிபிரபாவும் அவரும் மகளும், நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்தனர். அவர்களுடன் சசிபிரபாவின் தாயும் இருந்தார்.

அப்போது சாலையில் அவர்களை வழிமறித்த ராஜீவ் குமார் அவர்களிடம் வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றிய நிலையில், கைத்துப்பாக்கியை எடுத்த அவர், தனது மகளின் தலையில் துப்பாக்கியால் சுட்டார். அதில் சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் மரணமடைந்தார். உடனே, சசிபிரபாவையும் தலையில் சுட்டுக்கொன்ற ராஜீவ் குமார், அடுத்த சில வினாடிகளில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

பட்டப்பகலில் வீதியில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சசிபிரபாவின் தாய், அதிர்ச்சியில் உறைந்த நிலையில் தரையில் அமர்ந்துவிட்டார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன. பாட்னாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் கொண்ட போலீஸ் காலனி பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in