
பீகாரின் அராரியா மாவட்டத்தில் உள்ளுர் பத்திரிகையாளர் ஒருவர் இன்று அதிகாலையில் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது. ராணிகஞ்ச் பஜார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
35 வயதான விமல் குமார் யாதவ், டைனிக் ஜாகரன் என்ற செய்தித்தாளின் உள்ளூர் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை 5:30 மணியளவில் சில மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவைத் தட்டி, அவரது பெயரைச் சொல்லி அழைத்தனர். விமல் குமார் கதவைத் திறந்ததும் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து உள்ளூர் காவல் நிலைய அதிகாரி அதிகாலை 5:35 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். அராரியா காவல்துறை கண்காணிப்பாளரும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தடயவியல் குழுவும், மோப்ப நாய் படையும் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
முதல்வர் நிதிஷ் குமார், இது ஒரு துக்ககரமான சம்பவம் என்றும், இச்செய்தியைக் கேட்டதும், குற்றத்தை விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டதாகவும் கூறினார். விமலின் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பழைய பகையே சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைக்காக எதிர்க்கட்சிகள் நிதிஷ் குமார் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றன. “பீகாரில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. பீகாரில் பத்திரிகையாளர்கள் உட்பட அப்பாவி மக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட கொல்லப்படும்போது குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்" என்று மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி குற்றம் சாட்டினார்.