தமிழகத்தில் போலி வங்கிகள்: சங்கர் ஜிவால் எச்சரிக்கை

தமிழகத்தில் போலி வங்கிகள்: சங்கர் ஜிவால் எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் செயல்பட்டு வந்த போலி வங்கியின் கிளைகள் முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

சைபர் குற்றங்கள் மற்றும் அவற்றுக்கு எதிரான காவல்துறை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் சிறப்பு நிகழ்வு பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இவற்றை முன்னிட்டு ரிசர்வ் வங்கியின் சைபர் குற்றங்களுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு நூலை வெளியிட்ட சங்கர் ஜிவால், தமிழகம் நெடுக செயல்பட்ட போலி வங்கி கிளைகள் குறித்து விளக்கினார்.

’ஊரக மற்றும் வேளாண் விவசாயிகள் கூட்டுறவு வங்கி’ என்ற பெயரில் போலி வங்கி ஒன்று தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கிளைகள் பரப்பி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. ரிசர்வ் வங்கியின் முறையான அனுமதி, உரிமம் எதையும் பெறாது இந்த வங்கியின் கிளைகள் செயல்பட்டு வந்தன. நிஜ வங்கிக்கு உரிய அனைத்து ஆவணங்கள், அடையாளங்களுடன் இவை இருந்தன. தனியார் வங்கி ஒன்றின் உதவியுடன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் விநியோகித்ததுடன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் உயர் அதிகாரியின் சட்ட விரோதமான உதவிகளையும் பெற்று செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

போலி வங்கி நடத்தி கைதான சந்திரபோஸ்
போலி வங்கி நடத்தி கைதான சந்திரபோஸ்

தமிழகத்தின் மதுரை, விருத்தாசலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்ட இந்த வங்கி கிளைகள் அதிரடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வாடிக்கையாளர்களின் 56 லட்சத்துக்கும் மேலான இருப்புத்தொகை, 3000 சேமிப்பு கணக்குகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. இதில் சந்திரபோஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இம்மாதிரி போலி வங்கிகள், இணையதளத்தில் கிடைக்கும் போலி இணைப்புகள், அலைபேசிக்கு வரும் மோசடி செய்திகள் ஆகியவற்றில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்’ என்று ஆணையர் கேட்டுக்கொண்டார். நிகழ்வை முன்னிட்டு பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்கி கௌரவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in