‘பெங்களூரு ஆபாச ஆசாமி ஒரு ஆசிரியராக இருந்தவரா...?’ போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

பெங்களூரு மாலில் ஆபாச ஆசாமி
பெங்களூரு மாலில் ஆபாச ஆசாமி

பெங்களூரு லுலு மாலில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆசாமி, ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் எனத் தெரிய வந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் பெங்களூரு மால் ஒன்றில் பெண்ணிடம் பட்டவர்த்தனமாக ஆபாச நடவடிக்கையில் ஈடுபடும் ஆசாமி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அது பொதுவெளியில் பலரையும் கொதிக்கச் செய்தது. பகிரங்கமாய் பெண்ணிடம் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் மீது போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.

லுலு மால் விளையாட்டு அரங்கில் உலா வரும் மர்ம நபரை, வீடியோ எடுப்பவர் தொடர்ந்து செல்கிறார். சுற்றிலும் நடமாடும் மக்களை பொருட்படுத்தாது இளம்பெண் ஒருவரை முறைகேடாக தொட்டு, ஆபாச நடவடிக்கையில் அந்த மர்ம நபர் ஈடுபடுகிறார். அதே வேகத்தில் அந்தப் பெண் சந்தேகம் எழாத வகையில் விரைந்து மறையவும் செய்கிறார். அந்த வீடியோவை பார்க்கையில், மேற்படி மர்ம ஆசாமி பொதுவெளியில் இதே வேலையாக அலைபவர் எனவும் தெரிய வந்தது.

இந்த வீடியோ துணுக்கை இன்ஸ்டாகிராமில் பதிந்தவர், ’மர்ம நபரின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரை கேமராவுடன் தொடர்ந்தேன். இந்த வகையில் அவரின் ஆபாச நடவடிக்கை கேமராவில் பதிவானது’ என தெரிவித்திருந்தார். மால் காவலர்களை அழைத்து வருவதற்குள் மர்ம ஆசாமி வெளியேறி விட்டதாகவும், வீடியோவை எடுத்தவர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் என இதர சமூக ஊடகங்களிலும் வைரலானது.

அஸ்வந்த் நாராயணன்
அஸ்வந்த் நாராயணன்

இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டே பெங்களூரு போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. லுலு மாலில் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டவர் பெயர் அஸ்வத் நாராயணன் என்றும், 60 வயதாகும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் எனவும் தெரிய வந்தது. வீடியோ வைரலானதை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நாராயணனை போலீஸார் வலைவிரித்து தேடி வருகின்றனர்.

ஒரு ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற முதியவரின் ஆபாச நடவடிக்கை மீண்டும் நெட்டிசன்களை கொதிக்கச் செய்துள்ளது. இதனால், திசைமாறும் ஆசிரியர் சமூகம் மற்றும் அவர்களை வழிப்படுத்தாத கல்வித்துறை ஆகியவற்றுக்கு எதிராகவும் நெட்டிசன்கள் தீவிரமாக பதிவிட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in