`மாதம் ரூ.1 லட்சம் மாமூல் கொடு'- பார் ஓனரை மிரட்டிய திமுக எம்எல்ஏ சங்கர்

பாதுகாப்பு கேட்டு காவல்துறை ஆணையரிடம் புகார்
`மாதம் ரூ.1 லட்சம் மாமூல் கொடு'- பார் ஓனரை மிரட்டிய திமுக எம்எல்ஏ சங்கர்

"மாதம் 1 லட்சம் மாமூல் கொடு, இல்லன்னா பாரை எழுதி கொடுத்துட்டு ஓடிவிடு" என கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ கே.பி.பி.சங்கர் மீது பார் உரிமையாளர் ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஷ்வா(52). இவர் அதே பகுதியில் அரசு அனுமதி பெற்று கடந்த 2014-ம் ஆண்டு முதல் பார் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சங்கர் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக ஜோஷ்வா, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷ்வா, பல வருடங்களாக எந்தவித பிரச்சினை இல்லாமல் பார் நடத்தி வந்ததேன். சங்கர் எம்எல்ஏவாக பொறுப்பேற்றது முதல் பார் நடத்த வேண்டுமென்றால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் மாமூலாக தர வேண்டும் என மிரட்டி வருகிறார். இதனால் பயந்து மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் மாமூலாக கே.பி.பி சங்கருக்கு வழங்கி வருகிறேன்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கே.பி.சங்கர் அடியாட்களுடன் வந்து இனிமேல் மாதம் 1 லட்சம் ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பார் உரிமத்தையும், இடத்தினையும், எழுதி கொடுக்கும்படி மிரட்டி சென்றார். பாரை எழுதி கொடுக்க மறுத்ததால் கடந்த சில நாட்களாக கே.பி.பி.சங்கர் மற்றும் அவரது அடியாட்களான கார்த்தி, சேகர் ஆகியோர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று திடீரென பாருக்குள் புகுந்த கே.பி.பி.சங்கரின் அடியாட்கள் கட்டையால் அங்கு வேலை பார்த்து வந்த ஊழியர்கள் ஹரிகரன், விஜி ஆகியோரை தாக்கியதுடன், இன்றைக்குள் கொலை செய்து விடுவதாக கே.பி.பி.சங்கர் போனில் மிரட்டல் விடுத்தார்.

இதுமட்டுமின்றி எம்எல்ஏ கே.பி.பி.சங்கர் மணலி, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் பார் நடத்தும் உரிமையாளர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பதாக குற்றம்சாட்டிய அவர் சங்கரால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு எம்எல்ஏ சங்கர் மற்றும் அவரது அடியாட்கள்தான் காரணம். எனவே போலீஸார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். எம்.எல்.ஏ கே.பி.பி.சங்கர் மற்றும் அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆடியோ ஆதாரங்களுடன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளளேன்" என்று கூறினார்.

இதற்கிடையே பார் உரிமையாளர், மேலாளர் ஆகியோரை எம்எல்ஏ சங்கர் போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in