குரங்குகள் தாக்கியதால் நடைபயிற்சிக்குச் சென்ற வங்கி அதிகாரி உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹொன்னாலி தாலுகா அரகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டெப்பா(60). இவர் பிஎல்டி வங்கியின் துணைத்தலைவராக இருந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல நடைபயிற்சிக்குச் சென்றார்.
அப்போது அவரை குரங்குகள் சூழ்ந்து கொண்டு கடித்தன. அவ்வழியே சென்றவர்கள் குரங்குகளை விரட்டி படுகாயங்களுடன் இருந்த குட்டெப்பாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி குட்டெப்பா உயிரிழந்தார்.
இந்த நிலையில், பாஜக முன்னாள் எம்.பி ரேணுகாச்சார்யா, குட்டெப்பா குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அரகெரே கிராமத்தில் குரங்கு, கரடி, சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் இருப்பதாக ரேணுகாச்சார்யாவிடம் கிராமமக்கள் முறையிட்டனர். அவர் வனத்துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதியளித்தார்.