பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கு: ஊருக்குள் நுழைய 5 பேருக்குத் தடை விதித்த ஐஜி!

பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கு: ஊருக்குள் நுழைய 5 பேருக்குத் தடை விதித்த ஐஜி!

சங்கரன்கோவில் பகுதியில் ஊர் கட்டுப்பாடு காரணமாகப் பட்டியலின பள்ளிச் சிறுவர்களுக்குத் தின்பண்டம் தர மறுத்த பெட்டிக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் ஊருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் சிறுவர்கள் தின்பண்டம் கேட்டபோது கடைக்காரர் குழந்தைகளிடம், ‘இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் எதுவும் வாங்க வேண்டாம். ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு’ எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து எழுந்த புகாரின் காரணமாக பாப்பாங்குளம் நாட்டாமை மகேஷ்குமார் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்குச் சொந்தமான கடைக்கும் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி சீல் வைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோட்டாட்சியர் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் அந்த பள்ளியில் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீண்டாமை ஒடுக்குமுறையைத் தடுக்கவும், தொடர் பிரச்சினைகளைத் தவிர்க்கவும், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் ஊருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள வெளிப்புற ஏற்பாடு பிரிவைப் பயன்படுத்தத் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in