ரவுடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட யார் இந்த பாலச்சந்தர்... பாஜகவில் சேர்ந்த பின்னணி!

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட யார் இந்த பாலச்சந்தர்... பாஜகவில் சேர்ந்த பின்னணி!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பாலச்சந்தர் ரவுடி பட்டியலில் இருந்தவர் என்றும், மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சித்ததாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர் என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். தமிழக பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி/எஸ்.டி. பிரிவு தலைவராக இருந்து வந்தார். சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று இரவு மர்ம நபர்களால் பாலச்சந்தர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

பிரதமர் மோடி சென்னைக்கு வரும் நிலையில் பாஜக பிரமுகர் பாலச்சந்தர் கொல்லப்பட்டதாகவும், சென்னை கொலைநகரமாகி வருவதாகவும் பாஜகவினர் சமூக ஊடகங்களில் இந்த செய்தியைப் பரப்பி வருகின்றனர். ஆனால், கொலை செய்யப்பட்ட பாலச்சந்தர் மாமூல் வசூலிப்பது, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுவது என ரவுடியாக செயல்பட்டவர் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,
"இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த பாலச்சந்தர் மீது சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் கடந்த 2017-ல் ஒரு புகார் கொடுத்தார். அதில், பாலச்சந்தர் கட்டப்பஞ்சாயத்து செய்வதுடன், பணம் கேட்டு மிரட்டுகிறார் என்றும், சிந்தாதிரிப்பேட்டை இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் மாட்டுத்தலையை அவரே வைத்து விட்டு பிறமதத்தினர் அதை வீசியதாக புகார் கொடுத்துள்ளார். அத்துடன் அது தொடர்பாக பாலச்சந்தர் பேசிய ஒலிநாடாவையும் போலீஸில் ஒப்படைத்தார். இதுகுறித்து விசாரித்த போலீஸார், பிற மதத்தினர் தாக்கியதாக பாலச்சந்தர் பொய் புகார் கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்குகளில் பின் சிறையில் இருந்து வந்த பாலச்சந்தர் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தான், 2019-ம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இருந்து பாலச்சந்தர் பெயர் நீக்கப்பட்டது.

அதேநேரத்தில் மாமூல் வசூலிப்பது, கட்டப் பஞ்சாயத்து தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை ரவுடிகள் சிலருடன் பாலச்சந்தருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தால்தான் அவர் வெட்டிக்கொல்லப்பட்டாரா என விசாரித்து வருகிறோம்" என்றனர். இந்நிலையில் பாலச்சந்தர் கொலை தொர்பாக சிந்தாதிரிப்பேட்டை ரவுடிகள் பிரதீப், சஞ்சய், கலைவாணன் ஆகியோர் மீது தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in