அதிர்ச்சி... போக்சோவில் கைது செய்யப்பட்ட முன்னாள் மடாதிபதிக்கு ஜாமீன்!

முன்னாள் மடாதிபதி சிவமூர்த்தி சரணரு
முன்னாள் மடாதிபதி சிவமூர்த்தி சரணரு

கர்நாடகாவில் சித்ரதுர்கா முருகராஜேந்திர புருஹன் மடத்தின் முன்னாள் மடாதிபதி சிவமூர்த்தி சரணரு, போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 14 மாத நீதிமன்றக் காவலில் இருந்த நிலையில் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 26, 2022 அன்று, மைசூருவில் உள்ள நசராபாத் காவல் நிலையத்தில், போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ், 2 பதினெட்டு வயதுக்குட்பட்ட மாணவிகள் அளித்தப் புகாரின் கீழ் பாலியல் வன்கொடுமை செய்ததாக, சித்ரதுர்கா முருகராஜேந்திர புருஹன் மடத்தின் முன்னாள் மடாதிபதி சிவமூர்த்தி சரணரு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின், இந்த வழக்கு சித்ரதுர்கா ஊரக காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் 14 மாத சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் நேற்று மதியம் 12.40 மணிக்கு விடுவிக்கப்பட்டார். அவர் சித்ர துர்கா மாவட்டத்துக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையைத்தொடர்ந்து, தனது பக்தர்களுடன் சிறை வளாகத்தை விட்டு வெளியேறி தாவங்கேரே சென்றார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை

உயர்நிலைப் பள்ளிச் சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் நவம்பர் 8ம் தேதி, முன்னாள் மடாதிபதி சிவமூர்த்தி சரணருக்கு ஜாமீன் வழங்கியது. சித்ரதுர்காவில் உள்ள இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் புதன்கிழமையன்று உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஆராய்ந்து ஆவணங்களைச் சரிபார்த்து விடுதலை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அந்த உத்தரவு சிறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், விடுதலை செயல்முறை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

வியாழன் காலை, அரசுத் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த இரண்டாவது போக்சோ மனுவில், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதற்குப் பதிலளித்த நீதிபதி, இரண்டாவது வழக்கில் நீதிமன்றக் காவலுக்கான கோரிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஒத்திவைத்து, விடுதலை செயல்முறையை நடத்த அனுமதித்தார்.

போக்சோ
போக்சோ

இதனைத் தொடர்ந்து வெளியில் வந்த அவர், இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்காமல், "இந்த வழக்கைப் பற்றி நான் இப்போதைக்கு பேச மாட்டேன்" என்று கூறினார்.

முன்னாள் மடாதிபதியின் ஜாமீனுக்கான நீதிமன்றத்தின் நிபந்தனைகள்:

விசாரணை முடியும் வரை சித்ரதுர்காவுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்,

வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வது,

ரூ.2 லட்சம் பத்திரத்தை சமர்ப்பித்தல், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தல்,

சாட்சிகளை அச்சுறுத்துவது அல்லது மீண்டும் மீண்டும் ஈடுபடுவதைத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும்.

இதற்கிடையில், முன்னாள் மடாதிபதிக்கு எதிராகப் புகார் அளித்த மைசூருவைச் சேர்ந்த, 'ஓடநதி சேவா சம்ஸ்தே' என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.வி.ஸ்டான்லி, அவரது விடுதலையானது பாதிக்கப்பட்ட இளம்பெண்களை "பாதிக்கும்" என்று கூறி, முன்னாள் மடாதிபதிக்குத் தரப்பட்ட ஜாமீன் குறித்து ஏமாற்றம் தெரிவித்தார்.

விசாரணை அதிகாரிகளின் தவறுகளால் முருகாஸ்ரீக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்றும்; விடுதலை இவ்வளவு எளிதாக நடந்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in