குண்டாஸ் ரத்தான நிலையில் ஜாமீன் கேட்கும் பப்ஜி மதன்: காவல் துறைக்கு ஒரு வாரம் அவகாசம்

குண்டாஸ் ரத்தான நிலையில் ஜாமீன் கேட்கும் பப்ஜி மதன்: காவல் துறைக்கு ஒரு வாரம் அவகாசம்

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனு குறித்து பதிலளிக்க சென்னை காவல்துறைக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழியில் கொண்டு சென்றதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவானார்.

பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பதிவான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில், ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி நக்கீரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மதன் தரப்பு வழக்கறிஞர், பப்ஜி மதன் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகளின் படி அவருக்கு 3 மாதம் தான் தண்டனை வழங்க முடியும் எனவும் ஆனால் அவர் ஒன்பதரை மாதங்களாக சிறையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் மதன் மீது போடப்பட்டுள்ள பிரிவுகள் பெரும்பாலும் பொருத்தமற்றவை எனவும் எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, மதனின் மனு குறித்து பதிலளிக்க காவல்துறை தரப்பில் கூடுதல் அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஒரு வாரம் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in