`பெரிதாக துக்கப்பட வேண்டியிருக்கும்'- பாஜக பிரமுகர் கொலையில் வெளியான ரவுடி கும்பலின் அதிர்ச்சி ஆடியோ

`பெரிதாக துக்கப்பட வேண்டியிருக்கும்'- பாஜக பிரமுகர் கொலையில் வெளியான ரவுடி கும்பலின் அதிர்ச்சி ஆடியோ

துணிக்கடையில் துணி வாங்கி விட்டு பணம் தராமல் மிரட்டிய ரவுடியின் கூட்டாளிகள், கடை உரிமையாளரை மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் பாலச்சந்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் எடப்பாடியில் பதுங்கியிருந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொலைக்கான பின்னணி குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பாலச்சந்தரின் உறவினர்கள் சிந்தாதிரிபேட்டையில் துணிக்கடை நடத்தி வருவதும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி பிரதீப் அவரது மனைவிக்கு அடிக்கடை அங்கு துணி எடுத்துவிட்டு பணம் தராமல் மிரட்டி வந்ததுடன் அங்குள்ள கடைகளில் மாமூல் வசூல் செய்து வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து பாலச்சந்தரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிரதீப் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார் பாலச்சந்தர். இதனால் வேறு வழக்கில் ரவுடி பிரதீப்பை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகும் ரவுடி பிரதீப்பின் சகோதரர் சஞ்சய் துணிக்கடைக்கு சென்று துணி எடுத்துவிட்டு பணம் தராமல் மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியில் வந்த பிரதீப், துணிக்கடைக்கு சென்று உரிமையாளர்களிடம் பாலச்சந்தரை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது.

இதனிடையே, பாஜக நிர்வாகி பாலச்சந்தரை நேற்று முன்தினம் ரவுடி பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய், நண்பர் கலைவாணன் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்தனர். முன்னதாக ரவுடி பிரதீப் கைது செய்யப்பட்டிருந்த போது, அவரது கூட்டாளி ஒருவர் துணிக்கடை உரிமையாளரை மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், ரவுடி பிரதீப்பின் மனைவி துணி எடுத்ததற்கு பணம் கொடுக்காமல், மீண்டும் துணி கேட்டு மிரட்டல் விடுப்பதும், அதற்கு கடன் தொல்லை அதிகமாகி விட்டதாக கூறி துணிக்குண்டான பணத்தை தருமாறு உரிமையாளர் கேட்பதும் பதிவாகி உள்ளது. பின்னர் ரவுடி கும்பல் பெரிதாக துக்கப்பட வேண்டியிருக்கும் என மிரட்டல் விடுத்துள்ளது ஆடியோவில் பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in