இரவில் மர்ம கும்பல் திடீர் தாக்குதல்... நிலைகுலைந்துபோன மீன் வியாபாரி: லட்சங்களை பறிகொடுத்த சோகம்

இரவில் மர்ம கும்பல் திடீர் தாக்குதல்... நிலைகுலைந்துபோன மீன் வியாபாரி: லட்சங்களை பறிகொடுத்த சோகம்

தூத்துக்குடியில் மீன் வியாபாரியைத் தாக்கி மூன்றரை லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தாமஸ்நகரைச் சேர்ந்தவர் சுந்தர் (50) மீன் வியாபாரியான இவர், தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்களை ஏலம்விடும் பணியைச் செய்துவருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் இவர் தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்தில் மீன்பிடித்து வந்த மீனவர்களிடம் மீன்களை வாங்கி, சுந்தர் ஏலம்விட்டார். அதில் அவருக்குக் கிடைத்த மூன்றரை லட்சம் பணத்துடன் இன்று அதிகாலையில் துறைமுகத்தில் இருந்து தன் வீட்டை நோக்கிச் சென்றார்.

அப்போது மீன்பிடித் துறைமுகம் அருகே அவரை வழிமறித்த டூவீலரில் வந்த இருவர் சுந்தரைத் தாக்கினர். திடீர் தாக்குதலால் சுந்தர் நிலைகுலைந்துபோகவே அவரிடம் இருந்த மூன்றரை லட்சம் பணத்தையும் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்தக் கும்பல் மாயமானது. இதுதொடர்பாக சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் தாக்குதல் சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in