சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது சத்தம்கேட்டு ஓடிவந்த காவலாளியை பார்த்து கொள்ளை கும்பல் தப்பியோடிவிட்டது.
சென்னை அண்ணாசாலை, நந்தனம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அலுவலகத்தின் தரைதளத்தில், கனரா வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு, ஏடிஎம்மில் இருந்து திடீரென சத்தம் வரவே, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு அலுவலக காவலாளி சிவக்குமார் முதல் தளத்தில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்துள்ளார்.
காவலாளி வருதை பார்த்த இருவர் ஏடிஎம் உள்ளே இருந்து தப்பி சென்றனர். பின்னர் காவலாளி சிவகுமார் ஏடிஎம் மையத்திற்குள் சென்று பார்த்தபோது இயந்திரத்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே காவலாளி இது குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.