திருநின்றவூரில் 6 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்துத் திருட முயன்றவர் போலீஸில் சரண்

திருநின்றவூரில் 6 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்துத் திருட முயன்றவர் போலீஸில் சரண்
உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்...

சென்னை, திருநின்றவூர், பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் சேஷாத்ரி (50). இவர் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த சேஷாத்ரி, தொழிலில் எற்பட்ட நஷ்டம் காரணமாகக் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சேஷாத்ரி தனது குடும்பச் சூழல், வறுமை காரணமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துத் திருட முடிவுசெய்தார்.

நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் மையத்துக்கு அவர் சென்றுள்ளார். அங்கு கையில் கொண்டுசென்ற சுத்தியலை வைத்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துப் பணத்தைத் திருட முயன்றுள்ளார். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஆத்திரமடைந்த சேஷாத்ரி, ஏடிஎம் கண்ணாடி கதவை அடித்து நொறுக்கினார்.

போலீஸில் சரணடைந்த சேஷாத்ரி
போலீஸில் சரணடைந்த சேஷாத்ரி

பின்னர், அருகில் இருக்கும் கனரா வங்கி ஏடிஎம் மையத்துக்குச் சென்றவர் அங்கும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் கண்ணாடி கதவை அடித்து உடைத்துள்ளார். இதேபோல் அந்தப் பகுதியில் இருந்த ஆக்சிஸ், கனரா, யூனியன் பேங்க் மற்றும் 3 எஸ்பிஐ வங்கி என 6 ஏடிஎம் மையங்களின் கண்ணாடிக் கதவுகளை அடித்து உடைத்துள்ளார்.

பின்னர், திருநின்றவூர் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்தவற்றைக் கூறி சரணடைந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.