அதிர்ச்சி...வீடு முழுவதும் யானை தந்தம், மான் தோல், புலி பல்... ஜோசியரிடம் எப்படி வந்தது?

மான் தோல்
மான் தோல்

சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த யானை தந்தம், மான் தோல், கொம்பு, புலி பல் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஜோசியரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மான் கொம்புகள்
மான் கொம்புகள்

சென்னை மடிப்பாக்கம் கோவிந்தப்பா நகரில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட விலங்குகள் தோல், யானை தந்தம், புலி பல் ஆகியவை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் அந்த வீட்டில் இன்று சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைத்திருந்த 2 மான் தோல், 2 மான் கொம்பு, 10 புலி பல், 2 சிறிய யானை தந்தம், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

யானை தந்தம்
யானை தந்தம்

பின்னர் தடை செய்யப்பட்ட விலங்கு பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த நடராஜன்(78) என்பவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நடராஜன் பல வருடங்களாக ஜோசியம் பார்த்து வருவது தெரியவந்தது.

மேலும் நடராஜன் தன்னிடம் ஜோசியம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களிடம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி அவர்களுக்கு யானை முடியாலான மோதிரம், புலி பல்லால் செய்த டாலர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி நடராஜன் பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த பொருட்கள் சட்டவிரோதமாக வாங்கி அதனை தனது வாடிக்கையாளர்களுக்கு தோஷம் கழிப்பதாக கூறி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட விலங்கு பொருட்களை 15 ஆண்டுகளாக அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் நடராஜனுக்கு தடை செய்யப்பட்ட விலங்கு பொருட்களை விற்பனை செய்த நபர்கள் யார்? இதில் யார் யாருக்கு தொடர்பு? அவர்களுக்கு இந்த பொருட்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து நடராஜனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in