
அருப்புக்கோட்டையில் வீட்டு வாசல்களில் ரத்தம் தெளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் அப்பகுதி மக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால், முக்கிய நகரப்பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை காரணமாக இயல்பான நேரத்தை விட சீக்கிரமாக தூங்கச் சென்று விடுகின்றனர்.
இந்நிலையில், அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட உச்சி சுவாமி கோயில் 4வது குறுக்குத் தெருவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது. அந்த வீதியில் உள்ள பெண்கள் இன்று அதிகாலை நேரம் வீட்டு வாசலில் கோலம் போட எழுந்து வெளியே வந்தனர். அப்போது, அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அதாவது பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. அதோடு, ஒரு வீட்டில் சுவற்றில் மட்டும் பி.ஆர் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், அந்த பகுதியில் நின்றிருந்த ஆட்டோ ஒன்றிலும் ரத்தக்கறைகள் இருந்தது. இதை எல்லாம் பார்த்து அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு தங்கள் தெருவின் பின்பகுதியில் இதே போல் ஒரு வீட்டு வாசலில் மட்டும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. இன்று 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரத்தம் தெளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோவிலும் ரத்தம் இருப்பதால் இதை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என தெரியவில்லை என்றனர். இந்த விவகாரம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், ரத்த மாதிரிகளையும் ஆய்வுக்காக சேகரித்து சென்றுள்ளனர்.
யாரையாவது பலி கொடுக்க இப்படி செய்துள்ளார்களா, மாந்திரீக வேலைக்காக இந்த ரத்தக் காவு கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ரத்தம் தெளிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்