ராணுவத்தில் வேலை... கர்னல் சீருடை அணிந்து இளைஞர்களை ஏமாற்றியவர் கைது!

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

உத்தரப்பிரதேசத்தில் இந்திய ராணுவத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரை காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎஃப்) கைது செய்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட்டைச் சேர்ந்தவர் சத்யபால் சிங் யாதவ். 1985ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் 2003ல் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நிலையில் 2006ம் ஆண்டு யாதவ் பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். இதனால் அவர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து இந்திய ராணுவத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவதாக இளைஞர்களைக் குறிவைத்து மோசடி செய்ய ஆரம்பித்தார்.

ஆட்சேர்ப்பு வாரியத்தின் கர்னல் டி.எஸ்.சௌஹான் போல தன்னைக் காட்டிக் கொண்டும், ராணுவ சீருடை அணிந்தும் பல்வேறு மாநில இளைஞர்களிடம் ராணுவத்தில் சேர்த்து விடுவதாக யாதவ் ஆசைகாட்டினார்.

கைது
கைது

இந்நிலையில் ராணுவத்தில் எல்டிசி கிளார்க்காக தனது சகோதரரைச் சேர்ப்பதற்காக சுனில் குமார் என்ற இளைஞர் சத்யபால் சிங் யாதவிடம் 16 லட்ச ரூபாய் கொடுத்தார். அப்போது அவரிடம் பணியில் சேர்வதற்காக கடிதத்தை யாதவ் கொடுத்தார். மே 7ம் தேதி லக்னோவில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலக தலைமையகத்திற்கு சுனில்குமார், தனது சகோதரருடன் சென்ற போது தான் யாதவ் கொடுத்தது போலி ஆவணம் என்பது தெரிய வந்தது.

இது குறித்து சுனில்குமார் கொடுத்த புகாரின் பேரில் சத்யபால் சிங் யாதவ் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎஃப்) மற்றும் ராணுவப் புலனாய்வு பிரிவின் கூட்டுக்குழுவால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 420, 468, 171 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவரிடமிருந்து ஐந்து போலி கடிதங்கள், ஐந்து முத்திரைகள், ஒரு பிரிண்டர், ஒரு கர்னல் சீருடை மற்றும் போலி அடையாள அட்டை ஆகியவற்றையும் போலீஸார் கைப்பற்றினர். ராணுவத்தில் சேர்த்து விடுவதாக பல மாநில இளைஞர்களை முன்னாள் ராணுவவீரர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in