வீட்டை ஜப்தி செய்யச் சென்ற துணை வட்டாட்சியர்... உருட்டுக் கட்டைகளால் தாக்கிய கும்பல்!

துணை வட்டாட்சியருக்கு ஆறுதல் கூறும் மாவட்ட ஆட்சியர்
துணை வட்டாட்சியருக்கு ஆறுதல் கூறும் மாவட்ட ஆட்சியர்

திருச்சியில் கடன் கட்டாதவர்கள் வீட்டில் ஜப்தி செய்ய சென்ற  துணை வட்டாட்சியர் உள்ளிட்டவர்களைத் தாக்கியவர்கள் மீது  ஐந்து பிரிவுகளில்  கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காஜாமலை பகுதியில் ஏ.சி.எல் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு கனரா வங்கியில் ரூ.22 கோடி கடன் வாங்கி நிறுவனத்தை நடத்திவந்த இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து வங்கியில் பெற்ற கடனுக்காக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின்படி, காஜாமலை பகுதியில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான ரூ.44 லட்சம் மதிப்புள்ள வீட்டை மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார், கனரா வங்கி ஊழியர்களுடன் ஜப்தி செய்ய சென்றுள்ளார். அப்போது  அடையாளம் தெரியாத 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களை  சரமாரியாக உருட்டுக் கட்டைகளால் தாக்கியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை ஊழியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை ஊழியர்கள்

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மண்டல துணை வட்டாட்சியர், மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து  மண்டல துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பணியைப் புறக்கணித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வங்கிக் கடன் மீதான ஜப்தி நடவடிக்கையின்போது  திருச்சி மேற்கு மண்டல துணை வட்டாட்சியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள கே.கே.நகர் போலீஸார் அவர்களில் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in