பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

வெடித்து சிதறிய பட்டாசு ஆலை
வெடித்து சிதறிய பட்டாசு ஆலை

அரியலூரில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில்  உயிரிழந்துள்ளவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நிதி உதவியும் அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், விரகாலூர் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் 'அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில்  இன்று காலை எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் இறந்தனர் என்ற  துயரச் செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன்.  விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்திட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன்.

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு உரிய சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்,  லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in