ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் . இவர் ரயில்வே பாயிண்ட் மேனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துமாரி (28). அவர் நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனது மாமியார் தனலட்சுமி(56) மற்றும் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் அரக்கோணத்திற்கு மின்சார ரயிலில் வந்து திரும்பினார்.
இவர்கள் பயணம் செய்த பெட்டியில் 5 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்களில் 2 பேர் வழியில் இறங்கிக் கொண்டனர். இதையடுத்து, ரயில் மேல்பாக்கம் அருகில் சென்ற போது திடீரென அந்த பெட்டியில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி தனது கையில் கத்தியை வைத்துக்கொண்டு முத்துமாரி மற்றும் தனலட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான்.
அவர்கள் இருவரும் பணம் இல்லை என்று சொன்னதும் குழந்தையின் கழுத்தை அறுத்திடுவேன் என்று கத்தியை குழந்தையின் கழுத்தில் வைத்துள்ளார். அப்போது மாமியார் தனலட்சுமி கொள்ளையன் காலில் விழுந்து கெஞ்சி கதறி உள்ளார். அப்போதும் ஈவு இரக்கம் இல்லாத அந்த கொள்ளையன் முத்துமாரி அணிந்திருந்த கம்மலை கழற்றித் தருமாறு மிரட்டியுள்ளான்.
வேறு வழி இல்லாமல் முத்துமாரி தான் அணிந்திருந்த அரை சவரன் கம்மலை கழற்றி கொடுத்துள்ளார். இதையடுத்து, ரயில் அரக்கோணம் ஸ்டேஷனுக்குள் நுழைந்து வேகம் குறைந்ததை அடுத்து ரயிலில் இருந்து குதித்த அந்த கொள்ளையன் தப்பி ஓடி தலைமறைவானான். இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸில் முத்துமாரி நேரில் சென்று புகார் கொடுத்தார்.
இதேபோல், மற்றொரு சம்பவமும் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் ஜே. கே. என் நகர் வசந்தம்மாள் தெருவை சேர்ந்தவர் சித்ரா(41). இவர் செங்கல்பட்டு மாவட்டம் சித்தலப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் வரும் மின்சார ரயிலில் வந்து கொண்டிருந்தார். திருமால்பூர் தாண்டி ரயில் வரும்போது திடீரென கொள்ளையன் ஒருவன் சித்ராவின் கழுத்தில் கத்தியை வைத்து அவரது கழுத்தில் அணிந்து இருந்த 5 சவரன் தாலி சரடு, அரை சவரன் கம்மல் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றான்.
இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸில் சித்ரா புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ரயில்வே போலீஸார், இந்த கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் நடைபெற்று வரும் தொடர் வழிப்பறி சம்பவங்கள் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?
நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!
பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!
ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா... தஞ்சை பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்!
பிக் பாஸ்7: வைல்ட் கார்டில் நுழையும் அந்த ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தானா?