யார் வேண்டுமானாலும் அடையாளத்தை இழக்கலாம்!

யார் வேண்டுமானாலும் அடையாளத்தை இழக்கலாம்!

குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா மக்களவை, மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்படுவதன் மூலம், உள்நாட்டு பாதுகாப்பு வலுப்படுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

ஏற்கெனவே உள்ள 1920 சட்டத்திற்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. பழையச் சட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் ஆயுள் சிறை வரை தண்டனை பெற்ற குற்றவாளி (அல்லது) நன்னடத்தைக்கானப் பிணை பெற்றவர், குறைந்தபட்சம் 1 ஆண்டு சிறைத்தண்டனைப் பெற்று குற்றங்களில் கைது செய்யப்பட்டவர் ஆகியோரிடம் இருந்து கைவிரல் ரேகைகள் மற்றும் கால் தடப்பதிவுகள் மட்டும் பதிவு செய்யப்பட்டன.

ஆனால், தற்போதைய மசோதாவின்படி கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள், தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் சிறைவைக்கப்பட்டவர்களின் கைவிரல்கள் பதிவுகள், உள்ளங்கை அச்சுப்பதிவுகள், கால்தடப் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் ( குருதி, வெண்ணிறத் திரவம், தலை முடிமாதிரிகள்) மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட நடத்தைப் பண்புகளை உள்ளடக்கிய தனிப்பட்ட உயிரியல் தரவுகளைச் சேகரிக்கவும், சேமித்து வைப்பதற்கும், பகுப்பாய்வு செய்ய காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குவதைக் கட்டாயப்படுத்தியுள்ளது.

இப்படி சேகரிப்பட்டத் தரவுகளைத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 75 ஆண்டுகள் சேமிக்கும். இதற்கான தரவுகளை தர மறுப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும் என்றும் மசோதா சொல்கிறது. இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட போதே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு முழுமையான விளக்கமோ, விடைகளோ கிடைக்கவில்லை என்ற புகார் உள்ளது. " குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா மக்களின் அடிப்படை உரிமை, தனிநபர் அந்தரங்க உரிமைக்கு எதிரானது" என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டி பேசினார். மேலும், " எத்தகைய கைதிகளின் தகவல்களைச் சேகரிக்கலாம் என்று மசோதாவில் வரைமுறையில்லை "என்றும், "இந்த தகவல்களைக் காவல்துறையே தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது" என்றும் அவர் கூறிய குற்றச்சாட்டு கவலை கொள்ளத்தக்கது.

ஹிஜாப் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிறுபான்மையினரைக் குறிவைத்து நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, இந்த குற்றவியல் மசோதா மூலம் காவல்துறையை வைத்து மேலும் எளிதாக ஒடுக்க வழி உள்ளதாக அவர்கள் கொள்ளும் அச்சத்தைப் புறக்கணித்து விடத்தான் முடியுமா?

இந்த மசோதா அபாயகரமானது என மனித உரிமைத்தளத்தில் பயணியாற்றும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து அச்சப்பட்டவும் காரணம் உள்ளது. குற்றவாளிகள் மட்டுமின்றி குற்றம் சாட்டப்பட்டவரையே தனக்கெதிராக சான்றளிப்பவராக மாற்றக்கூடிய அபாயம் இந்த மசோதாவில் உள்ளது. அதாவது உயிரியல் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் இந்த அனுமதியை காவல்துறையே எடுத்துக் கொள்வது அடிப்படை உரிமைக்கு எதிரானது. முந்தைய 1920 சட்டப்படி குற்றவாளியின் அடையாளங்களை ஆவணப்படுத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரையே தனக்கு எதிராக சாட்சியளிக்கும் நடவடிக்கையை புதிய மசோதா கொண்டு வந்துள்ளது.

" எந்தவொரு தனிநபரையும் தனக்கெதிராக சான்றளிப்பவராக நிர்பந்திக்கக் கூடாது" என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. " குற்றம் சாட்டப்பட்டவரின் அனுமதி இல்லாமல் எந்த சோதனைகளைம் செய்யக்கூடாது" என்றும்," தானாக முன்வந்து சோதனை மேற்கொண்டாலும் அதை சாட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதையெல்லாம் மீறி பாஜக அரசு இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளது என்று கவலையுடன் தெரிவிக்கின்றனர் மனித உரிமை சார்ந்த வழக்கறிஞர்கள்.

இன்றைய நவீன உலகத்தில் தனிமனிதத் தகவல்களைத் திருடுவது மிகச்சுலபமானது. ஏனெனில், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு, ரகசியத்தன்மை, தனியுரிமை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சட்டமோ, நிர்வாக கட்டமைப்போ இந்தியாவில் இல்லை. உலக நாடுகள் நடுங்கக்கூடிய அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்டதை மறந்து விடத்தான் முடியுமா? இந்தியாவில் ஆதார் தரவுகள் திருடப்பட்டதாக எழுந்த புகாருக்கு இதுவரை பதில் இல்லை. இந்த நிலையில் தனி மனிதர்களின் அடையாளங்களை 75 ஆண்டுகளாக மத்திய அரசு எப்படி பத்திரப்படுத்தும் என்ற கேள்வி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவிக்குமார் எம்.பி
ரவிக்குமார் எம்.பி

இந்த மசோதா நிறைவேற்றம் குறித்து விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமாரிடம் பேசினோம். " வாகனங்களில் லைசன்ஸ் இல்லாமல் வருபவர்கள், பெட்டி கேஸ் என அபராதம் கட்டுபவர்கள் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தின் மூலம் தண்டனை பெற்ற குற்றவாளியாகின்றனர். இவர்களிடம் கைரேகை உள்ளிட்ட அத்தனை உயிரியல் தரவுகளைச் சேரிக்க முடியும். அத்துடன் குற்றவாளி என தண்டிக்கப்பட்டவர் மட்டுமின்றி அவர்களது உறவினர்களையும் இந்த உயிரியல் தரவு விவகாரத்திற்குள் கொண்டு வர முடியும்.

தங்களது உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் குற்றவாளியென்கிறது இந்த மசோதா. எனவே, இவர்களின் உயிரியல் தரவுகளைச் சேரிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும். 'நான் எந்த போராட்டத்திலும் பங்கேற்கவில்லை: என் மீது எப்படி இந்த சட்டம் பாயும்?' என யாரும் நினைக்க வேண்டாம். மாஜிஸ்திரேட் அனுமதி பெற்றால் யாருடைய அடையாளத்தையும் காவல்துறை சேகரிக்க முடியும். இந்த தரவுகளை டிஜிட்டல் மையமாக்கும் முயற்சி பெரும் ஆபத்தை உருவாக்கும். கல்லூரியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் கைது செய்யப்பட்டார் என்று ஆவணப்படுத்தப்பட்ட விபரத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தால், அவர் மேல்நிலைக்கல்வி கற்க வெளிநாடு செல்ல முடியாத நிலையை இந்த மசோதா உருவாக்கும் அபாயமும் உள்ளது. எனவே, காவல்துறை நினைத்தால் யாருடைய அடையாளத்தையும் பெற இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது. பாஜக உயர் பொறுப்புகளில் உள்ள பலர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இந்த உயிரியல் தரவுகள் சேகரிக்கப்படுமா என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகிறார்கள்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.