முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய, விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிந்துள்ள போலீஸார்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிந்துள்ள போலீஸார்.
Updated on
2 min read

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், விடிய விடிய சோதனை நடத்தியதுடன் முக்கிய ஆவணங்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையும் முடிவடைந்தது. ஆனால் மீண்டும் அமலாக்கத்துறை வழக்கை எடுக்காமல் இருக்க டாக்டர் சுரேஷ்பாபுவிடம் 1 கோடி ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கேட்டுள்ளார்.

இதனால் பயந்து கொண்டு ரூ.20 லட்சத்தை ஏற்கெனவே சுரேஷ் பாபு கொடுத்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தர வேண்டும் எனக்கூறி மேலும் 51 லட்ச ரூபாயை அங்கித் திவாரி கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி.
கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி.

இதன் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூ31 லட்சம் ரூபாய், அங்கித் திவாரியிடம் டாக்டர் சுரேஷ்பாபுவால் நேற்று கொடுக்கப்பட்டது. இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர் காரில் தப்பினார் ஆனால், அவரை விரட்டிச் சென்ற திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார், மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வழிமறித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப் பணம் ரூ31 லட்சம் கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் கூட்டாளிகள் யார், யாருக்கெல்லாம் லஞ்சப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்தார் என பல மணிநேரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் மதுரையில் உள்ள அங்கித் திவாரி வீடு, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று மாலை தொடங்கிய இந்த சோதனையானது, விடிய விடிய தொடர்ந்து நடைபெற்றது.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகம்
மதுரை அமலாக்கத்துறை அலுவலகம்

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, சிஆர்பிஎப் போலீஸார், இரவில் பாதுகாப்புக்காக வந்தனர். ஆனால், அவர்களுக்கு தமிழக காவல் துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஐந்து மணி நேரமாக வெளியே காத்துக்கொண்டிருந்த அவர்கள், பின்னர் திரும்பிச்சென்றனர்.

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

மேலும், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வீடு மற்றும் அவர் அலுவலகத்தில் பயன்படுத்தி்ய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய நிலையில், தொடர்ந்து, டிச.15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் பல மணிநேரம் அதிரடி சோதனை நடத்தி அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in