28.5 கிலோ தங்கக் காசுகளுக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டனர்... ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது மேலும் ஒரு மோசடி புகார்!

ஹெலிகாப்டர் சகோதரர்கள்
ஹெலிகாப்டர் சகோதரர்கள்

சென்னையில் செயல்படும் பிரபல நகைக் கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியதாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். தொழிலதிபர்களான இருவரும் சகோதரர்கள். எப்போதும் ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால் "ஹெலிகாப்டர் சகோதரர்கள்" என அழைக்கப்பட்டனர். கும்பகோணத்தில் விக்டரி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை நடத்தி வந்தனர்.  வெளிநாடுகளிளிலும் பல தொழில்களை இவர்கள் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தங்களுக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி தரப்படும் என இவர்கள் அறிவித்ததால்  கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்தனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று தீவிரமடைந்த சமயத்தில் முதலீடு செய்தவர்களுக்குப் பணம் சரியாகக் கொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. 

பணத்தை முதலீடு செய்தவர்கள் பலரும்  ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டுக்குச் சென்று தங்கள் பணத்தை கேட்டதால் ஒரு கட்டத்தில்  அவர்கள் தலைமறைவானார்கள். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது பண மோசடி புகார் அளித்தனர். 

இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட சிலரை கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்நிலையில் இவர்கள்மீ து சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையின் மேலாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார். 

கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர். 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்த அவர்கள் மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுகளுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை  விசாரணை மேற்கொண்டுள்ள போலீஸார் விரைவில் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in